விளையாட்டு

அரசியல் செய்யாதீர்கள்: தினேஷ் கார்த்திக் நீக்கத்தால் பிசிசிஐ-யை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து, பிசிசிஐ அமைப்பை வறுத்தெடுத்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்தே இந்திய அணியில் இருந்து வருகிறார். ஆனால், தினேஷ் கார்த்திக்கின் துரதிர்ஷ்டம் அணியில் அவர் வாய்ப்பு பெற்றபோது, தோனிக்கும் வாய்ப்பு கிடைத்து அவருக்கும் அணிக்குள் வந்தார்.

அதன்பின் நடந்த பல்வேறு போட்டிகளில் தோனியின் செயல்பாடு சிறப்பாக இருக்கவே நிலையான இடத்தைப் பெற்றார். கார்த்திக் மாற்று விக்கெட் கீப்பராகவே கருதப்பட்டாரே தவிர, முழுநேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கருதப்படவில்லை. அதேசமயம், தனக்குக் கிடைத்த பெரும்பாலான வாய்ப்புகளைச் சரியாகவே பயன்படுத்தவும் தவறவில்லை தினேஷ் கார்த்திக்.

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இந்திய அணிக்குள் இடம் பெற்ற தினேஷ் கார்த்திக் நிடாஹஸ் கோப்பையில் இருந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். நடுவரிசையில் மிகவும் நெருக்கடியான நேரத்தில் களமிறங்கி ஃபினிஷிங்கை சிறப்பாகச் செய்து வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளில் தினேஷ் கார்த்திக்,  இந்தியா எதிரணியினரின் இலக்கை வெற்றிகரமாக சேஸிங் செய்த 10 போட்டிகளில் 7 முறை நாட் அவுட்டாகத் திகழ்ந்துள்ளார். இந்திய அணி இலக்கை விரட்டி வென்ற 7 இன்னிங்ஸ்களிலும் கார்த்திக் கடைசி வரை நின்றுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 142.42 என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறந்த பேட்டிங்கில் ஃபார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக்கை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து நீக்கிவிட்டு, டி20 போட்டியில் மட்டும் வாய்ப்பளித்துள்ளது இந்திய அணியின் தேர்வுக்குழு. இந்திய அணியின் தேர்வுக்குழுவின் இந்த முடிவு நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால், ஆஸ்திரேலய, இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைத்தும் பெரும்பாலான போட்டிகளில் சொதப்பலாக பேட்டிங் செய்த கே.எல். ராகுலுக்கு ஆஸி.க்கு எதிரான டி20, ஒருநாள் இரு பிரிவுகளிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல் தன் ஒருநாள் போட்டி கரியரில் மொத்தம் 13 இளம் வீரர் ரிஷப் பந்த்துக்கும் ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அணியில் தோனி, ரிஷப்பந்த், கே.எல்.ராகுல் என 3 விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்றுள்ளனர்.

பிசிசிஐ தேர்வுக்குழுவின் இந்த முடிவை கிரிக்கெட் ரசிகர்களும், நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். வீரர்களிடத்தில் பிசிசிஐ அரசியல் செய்கிறது, மோசமான ஃபார்மில் இருக்கும் ராகுல், ரிஷப்பந்துக்கு வாய்ப்பு வழங்கப்படுவது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

'தினேஷ் கார்த்திக் அதிர்ஷ்டமில்லாத வீரர். தேர்வுக்குழுவினர் தேவையில்லாமல் ரிஷப்பந்த், கே.எல்.ராகுலை அணிக்குள் திணிக்க முயல்கிறார்கள்' என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

'தினேஷ் கார்த்திக்கை நீக்கக் காரணம் என்ன, என்ன தவறு செய்தார். ராகுலை அணிக்குள் கொண்டுவர வேண்டிய நோக்கம் என்ன' என்று நெட்டிசன்கள் கேட்டுள்ளனர்.

'தேர்வுக்குழுத்தலைவர் எம்எஸ்கே நன்றாக அரசியல் செய்கிறார். நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கும் தினேஷ் கார்திக்கை ஆஸி. தொடரில் நீக்கக் காரணம் என்ன' என்று ஒருவர் கேட்டுள்ளார்.

'கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரைக் காட்டிலும் கார்த்திக் அனுபவம் வாய்ந்தவர் அவரை ஏன் நீக்கினீர்கள் 'என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

'தினேஷ் கார்த்திக் அணியில் தனது திறமையைச் சிறப்பாக நிரூபித்தும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. பிசிசிஐ சிறுபிள்ளை அரசியல் செய்கிறது' என்று சிலர் திட்டியுள்ளனர்.

'கடந்த ஓர் ஆண்டாக கார்த்திக் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஆனாலும் பிசிசிஐ அவரை நீக்கியுள்ளது. கே.எல் ராகுலைச் சேர்த்ததற்கு காரணத்தை பிசிசிஐ கூறமுடியுமா' எனக் கேட்டுள்ளனர்.

இந்திய அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டதற்கும், ஒருநாள் அணியில் அவருக்கு இடம் அளிக்காதமைக்கும் பிசிசிஐ அமைப்பையும், தேர்வுக்குழுவையும் நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT