போர்ட் எலிசபத்தில் நடைபெறும் இலங்கை-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி 2ம் நாளிலேயே பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
2ம் நாளான இன்று 16 விக்கெட்டுகள் சரிய தென் ஆப்பிரிக்கா நேற்று 222 ரன்களுக்குச் சுருண்டது, தொடர்ந்து ஆடிய இலங்கை நேற்று 60/3 என்று இருந்தது, இன்று 154 ரன்களுக்கு இலங்கை அணி சுருண்டது, தென் ஆப்பிரிக்க அணி தன் இரண்டாவது இன்னிங்சில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு 197 ரன்களாக உள்ளது.
இதை விரட்டி வெற்றி பெற்று விட்டால், ஆசியாவிலிருந்து முதல் அணி தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் வரலாற்றுச் சாதனையை இலங்கை அணி நிகழ்த்தும். சமீபத்தில் கோலி தலைமை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றி ஆஸியில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற வரலாற்றைப் படைத்தது, இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவில் அத்தகைய சாதனைக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் கடுமையான, சவாலான பிட்சில் 304 ரன்கள் இலக்கை குசல் பெரேரா தன் 153 நாட் அவுட் என்ற காவிய இன்னிங்ஸ் மூலம் விரட்டி சாதனை புரிந்ததையடுத்து தற்போது 197 ரன்கள்தான் இலக்கு என்ற நிலையில் இலங்கை அணி தன் 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. இன்றைய ஆட்டத்தில் இன்னும் 18 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.
இன்று கேகிசோ ரபாடாவின் 4/38 பந்து வீச்சின் மூலம் தென் ஆப்பிரிக்கா 68 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆனால் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சுரங்க லக்மல், ரஜிதா, ஸ்பின்னர் டிசில்வா ஆகியோரது பவுலிங்கில் தேநீர் இடைவேளையின் போது 91/5 என்று சரிந்த தென் ஆப்பிரிக்க அணி அதன் பிறகு வரிசையாக விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களுக்குச் சுருண்டது, தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் ஒருமுனையில் அரைசதம் எடுத்து, அதாவது 50 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
தேநீர் இடைவேளைக்கு முன்னதாக 2 ஓவர்களில் ஹஷிம் ஆம்லா, குவிண்டன் டி காக் பெவிலியன் திரும்பினர். டி காக் ஆட்டமிழந்த பிறகு முல்டர், மஹராஜ், ரபாடா, ஸ்டெய்ன், ஆலிவியர் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர், ரபாடா, ஸ்டெய்ன் டக் அவுட்.
இலங்கை தரப்பில் சுரங்க லக்மல் 4 விக்கெட்டுகளையும் ரஜிதா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற டி.எம்.டிசில்வா என்ற ஆஃப் ஸ்பின்னர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற தென் ஆப்பிரிக்கா 128 ரன்களுக்குச் சுருண்டது. மொத்த முன்னிலை 196, இலங்கைக்கு வரலாற்று தொடர் வெற்றிக்குத் தேவை 197 ரன்கள், தற்போது இலங்கை 14/0.