விளையாட்டு

பார்டர்-கவாஸ்கர் ட்ராபி பரிசளிப்பு நிகழ்ச்சியில் சுனில் கவாஸ்கர் பங்கேற்பது சந்தேகம்?

பிடிஐ

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெறும் 4வது, இறுதி டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு பார்டர்-கவாஸ்கர் ட்ராபியை ஆலன் பார்டர், சுனில் கவாஸ்கர் இருவரும் தொடரை வென்ற அணிக்கு வழங்குவது மரபு.

ஆனால் இம்முறை பரிசளிப்பு நிகழ்ச்சியில் சுனில் கவாஸ்கர் பங்கேற்பது கடினம் என்று தெரிகிறது. காரணம், இன்று வரை அவர் பங்கேற்க கிரிக்கெடெ ஆஸ்திரேலியா அழைப்பு விடுக்கவில்லை.

இது குறித்து கவாஸ்கர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கூறியதாவது:

ஜேம்ஸ் சதர்லேண்ட் இருந்த போது கடந்த மே மாதம் டிராபியை பரிசளிக்க என்னுடைய வருகை குறித்துக் கேட்டு கடிதம் எழுதியிருந்தார்,  நான் மகிழ்வுடன் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றிருப்பேன் அவர் பதவி விலகிய பிறகு இன்றுவரை கிரிக்கெட்  ஆஸ்திரேலியாவிடமிருந்து எந்த ஒரு தொடர்பும் இல்லை, என்கிறார் சுனில் கவாஸ்கர்.

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்துக்குப் பிறகே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டதில் சதர்லேண்ட் பிறகு பயிற்சியாளர் டேரன் லீ மேன் ஆகியோர் விலகி விட்டனர்.

இந்திய அணி 2-1 என்ற முன்னிலை பெற்றுள்ளதோடு சிட்னியில் ட்ராவோ, வெற்றியோ செய்தால் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வென்ற வரலாற்றை நிகழ்த்தும்.

இந்த வரலாற்றுக் கணத்தில் இந்திய முன்னாள் லிட்டில் மாஸ்ட்ர் சுனில் கவாஸ்கர் பங்கேற்பதுதான் முறை, அதுதான் இந்திய அணிக்கும் கவுரவம் என்று உணரப்படுகிறது, ஆனால் கவாஸ்கருக்கு இன்று வரை அழைப்பில்லை. ஒருவேளை கடைசி கட்டத்தில் அழைப்பு விடுக்கப்படலாம்.

பார்டர்-கவாஸ்கர் டிராபி 1996-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த டிராபி தற்போது இந்திய அணியின் கைவசம் உள்ளது.

SCROLL FOR NEXT