விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்வது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கும்: அலெக்ஸ் காரே நம்பிக்கை

பிடிஐ

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை நாங்கள் வெல்வது எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தையும், நம்பிக்கையை அளிக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டன் அலெக்ஸ் காரே தெரிவித்துள்ளார்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் வென்று 1-0 என்று ஆஸ்திரேலிய அணி முன்னணியில் இருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 4-1 என்று தொடரை ஆஸ்திரேலியா வென்றது அதன்பின் எந்த ஒரு தொடரையும் வெல்லவில்லை. கடந்த 2018-ம் ஆண்டில் 18 ஒரு நாள் போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வென்று மோசமான நிலையில் இருக்கிறது. இந்நிலையில், 2019-ம் ஆண்டில் தொடரை வென்று வெற்றியுடன் ஆண்டைத் தொடங்க முயல்கிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டன் அலெக்ஸ் காரே இன்று அடிலெய்டில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியாவுக்கு எதிராக நாங்கள் ஒருநாள் தொடரை வென்றால் அது எங்களுக்கு மிகப்பெரிய விஷயம். மிகப்பெரிய ஊக்கத்தையும், நம்பிக்கையையும் எதிர்வரும் தொடர்களுக்கு எங்களுக்கு அளிக்கும். குறிப்பாக உலகக்கோப்பைப் போட்டிக்கு எங்களைத் தன்னம்பிக்கையுடன் வழிநடத்த உதவும்.

இந்தியாவைப் பொருத்தவரை மிகச்சிறந்த அணி. முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும் 2-வது போட்டியில் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் விளையாடலாம்.

கடந்த போட்டியில் ரோஹித் சர்மா, தோனி சிறந்த பாட்னர்ஷிப்பை அளித்தார்கள். அவர்களைப் பிரிக்க நாங்கள் மிகுந்த சிரமப்பட்டோம். இந்த ஒருநாள் தொடர் பெஹரன்டார்ப், ரிச்சர்ட்ஸன், சிடில் ஆகியோருக்குச்சிறந்த தொடராகஅமையும்.

எனக்கும், ஹேண்ட்ஸ்கம் போன்ற இளம் வீரர்களுக்கும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு இந்த தொடர் சிறந்த வாய்ப்பளிக்கிறது. அடிலெய்ட் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளதால், நாதன் லயன் அல்லது, ஜம்பா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

இவ்வாறு காரே தெரிவித்தார்

SCROLL FOR NEXT