விளையாட்டு

‘ஆசிய விளையாட்டுப் போட்டி: சோம்தேவ் விலகியது சரியான முடிவல்ல’

செய்திப்பிரிவு

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான (ஒற்றையர் பிரிவு) சோம்தேவ், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்காமல் ஏடிபி டென்னிஸ் போட்டியில் கவனம் செலுத்த முடிவு செய்திருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. சோம்தேவின் இந்த முடிவு சரியானதல்ல என அகில இந்திய டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஏஐடிஏ பொதுச் செயலாளர் பாரத் ஓஸா கூறியிருப்பதாவது: ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து சோம்தேவ் விலகியிருப்பது சரியான முடிவல்ல.

அவரின் முடிவு ஏமாற்றமளிக்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான டென்னிஸ் அணியை அறிவிப்பதற்கு முன்பு போட்டியில் பங்கேற்க முடியுமா என ஏஐடிஏ தன்னிடம் கேட்கவில்லை என சோம்தேவ் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சோம்தேவ் நாட்டின் முதல்நிலை வீரராக இருப்பதால் அவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். குறைந்தபட்சம் அணி பிரிவு போட்டியிலாவது பங்கேற்குமாறு நாங்கள் சொல்கிறோம்.

ஆனால் அவரோ பங்கேற்கமாட்டேன் என பிடிவாதமாக உள்ளார். நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு சோம்தேவை விளையாட வைக்க முயற்சித்துவிட்டோம். இனி மாற்று வீரரைத்தான் ஆடவைக்க வேண்டும்.

ஆனந்த் அமிர்தராஜ், பயிற்சியாளர் ஜீசன் அலி ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பிறகு ஆசிய விளையாட்டில் அணி பிரிவு போட்டியில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறோம். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் விளையாட வேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது. ஆனால் நாங்கள் வீரர்களை நிர்பந்திக்க முடியாது. அவர்களிடம் வேண்டுகோள் விடுக்க மட்டுமே முடியும். இந்த விஷயத்தில் அரசாங்கம் ஆட்சேபனை தெரிவிக்குமானால் அதற்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதையும் சோம்தேவிடம் தெரிவித்துவிட்டோம்.

டென்னிஸ் தனிநபர் போட்டி. அவர்கள் தேசிய சம்மேளனத்தின் கீழ் விளையாடவில்லை. அதனால் நாம் என்ன செய்ய முடியும். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து சிந்திக்க முடியாது என்றார்.

டென்னிஸ் வீரர்கள் தற்போது அரசிடமிருந்து நிதியுதவி பெறுகிறார்களா என்று பாரத்திடம் கேட்டபோது, “ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டுக்கு முன்னதாக வீரர்களுக்கு தேவையான பயிற்சி, உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அரசிடம் அளிக்கிறோம். ஆனால் 2010 காமன்வெல்த் போட்டிக்குப் பிறகு நிதியுதவி எதுவும் கிடைக்கவில்லை” என்றார்.

மாற்று வீரராக இடம்பெற்றுள்ள திவிஜ் சரண், சோம்தேவுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்படுவார் என தெரிவித்த பாரத், “கலப்பு இரட்டையர் பிரிவில் திவிஜ் விளையாடலாம். அது அவருக்கு சரியாக இருக்கும். சில நாட்களுக்கு முன்னர் அவர் சர்வதேச தரவரிசையில் டாப்-100-க்குள் வந்தார். அவருக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவரை அணியில் சேர்த்திருக்கிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT