விளையாட்டு

‘உனக்கு அலுக்கவே இல்லையா?’ - புஜாராவைப் பார்த்து அதிசயித்த நேதன் லயன்: கவாஸ்கர், கோலி பட்டியலில் இணைந்து சாதனை

செய்திப்பிரிவு

சிட்னி டெஸ்ட் போட்டியிலும் மிகப்பிரமாதமாக ஆடிய செடேஷ்வர் புஜாரா தனது 18வது டெஸ்ட் சதத்தை எடுத்ததோடு இந்தத் தொடரில் 3வது சதம் எடுத்தும் சாதனை புரிந்துள்ளார்.  இவர் 130 நாட் அவுட் என்று முடித்திருப்பதால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடியும் அழுத்தமும் இன்னும் அதிகமாகியுள்ளது.

ஏனெனில் இந்திய ஸ்கோர் வீழ்த்த முடியாத அளவுக்குச் சென்று விட்டால்... மேலும் ஆஸ்திரேலிய அணியில் ஒருவர் கூட இன்னும் சதம் எடுக்கவில்லை.  ஒரே பிட்ச்தான் ஆனால் ஒரு அணி ஆதிக்கம் செலுத்துவது ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக புஜாரா.

இன்று அவர் லெக்திசையில் அடித்து விட்டு தன் சதத்தைப் பூர்த்தி செய்தவுடன் அவரைக் கடந்து சென்ற நேதன் லயன், “இன்னும் உனக்கு அலுக்கவில்லையா” என்று கேட்டது ஸ்டம்ப் மைக்கில் எடுத்ததாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று பதிவு செய்துள்ளது.

இந்தத் தொடரி புஜாரா மட்டுமே 1135 பந்துகளை எதிர்கொண்டு ஆடியுள்ளார். இதில் 6 முறை ஆட்டமிழந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் அதிகம் பந்துகளை ஆடியவர் உஸ்மான் கவாஜா, இவர் 509 பந்துகளையே இந்தத் தொடரில் எதிர்கொண்டுள்ளார்.

புஜாராவின் சராசரி 50ஐக் கடந்துள்ளது. நேதன் லயனை மிகச்சரியாக ஆடுகிறார் புஜாரா. மேலேறி வந்து அவர் ஸ்பின்னை அழிக்கிறார், பின்னால் சென்று இடைவெளியில் தட்டி விட்டு ரன் ஓடுகிறார். லயன் இவருக்கும் அகர்வாலுக்கும் வீசத் திணறுவதைப் பார்க்க முடிந்தது.

ஆஸ்திரேலியாவில் ஒரே தொடரில் 3 சதங்களை அடித்தவர்களான சுனில் கவாஸ்கர், விராட் கோலி பட்டியலில் தற்போது புஜாராவும் இணைந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக எட்ஜ்பாஸ்டனில் முதல் டெஸ்ட் போட்டிக்கு புஜாராவை உட்கார வைத்தனர் இதே கோலியும், ரவிசாஸ்திரியும், அதற்கு அவர் மட்டையினால் பதிலடி கொடுத்து வருகிறார்.

நேதன் லயன் கேட்பது போல் புஜாராவுக்கு இன்னும் அலுக்கவில்லையோ...? எப்படி அலுக்கும் வரலாறு படைக்கும் தொடர் வெற்றியல்லவா இலக்கு, கனவு எல்லாம்.

SCROLL FOR NEXT