தோனிக்கு மாற்று இல்லை என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். ஒருநாள் தொடரில் பல விமர்சனங்களுக்கு இடையே தொடர் நாயகன் விருதைத் தோனி தட்டிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் டெய்லி டெலிகிராப் ஊடகத்துக்கு மைக்கேல் வானுக்கு அளித்த பேட்டியில் ரவி சாஸ்திரி கூறியிருப்பதாவது:
தோனி ஓய்வு பெற்று விட்டால் என்ன திட்டம் என்று கேட்கிறீர்கள்... அவருக்கு மாற்று கிடையாது. அவரைப் போன்ற வீரர்கள் 30-40 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருவார்கள். ஆகவேதான் நான் இந்தியர்களிடம் கூறுகிறேன் இருக்கும் வரை அவர் ஆட்டத்தை ரசியுங்கள் என்று. அவர் இல்லை என்றால் அந்த இடம் பெரிய வெற்றிடமாக இருக்கும்.
ரிஷப் பந்த் இருக்கிறார் என்று தெரியும், ஆனால் விளையாட்டுக்கு ஒரு தூதராக நீண்ட காலம் தோனி இருப்பது போல் இன்னொருவர் கடினம், இது அபாரம்.
ரிஷப் பந்த்தின் ஹீரோ தோனிதான். ஒவ்வொரு நாளும் தோனிஉடன் பேசுகிறார். டெஸ்ட் தொடரின் போது அவர் நிறைய பேசியுள்ளார் என்றே நினைக்கிறேன். இப்படிப்பட்ட பரஸ்பர மரியாதை மிகப்பெரிய விஷயம். அதே போல் விராட் கோலி, தோனி இருவருக்குமிடையே உள்ள பரஸ்பர மரியாதை நம்ப முடியாத ஒன்று. இதனால் ஓய்வறையில் என் பணி எளிதாகிறது.
நான் அதிகம் வீரர்களின் ஆட்டத்தில் தலையிடுவதில்லை, சில வேளைகளில் கொஞ்சம் ஃபைன் ட்யூன் செய்வேன், தேவைப்பட்டால்தான் அதுவும் கூட. ஆனால் யாராவது ஒரு வீரர் எதைக்கண்டாவது பயப்படுகிறார் நான் அவர் தலையில் தட்டி சரி செய்வேன், இந்த விஷயத்தில் நான் மோசமானவன். இல்லையென்றால் நான் பயிற்சியாளராக இருக்க முடியாது.
இந்த அணிக்கு ஆட வேண்டுமென்றால் அச்சமற்ற முறையில் ஆட வேண்டும் என்பது கட்டாயம். அச்சமற்ற முறை என்றால் உன் இயல்பூக்கத்தையும் தெளிவான சிந்தனையையும் நம்புவது என்று பொருள். மனத்தளவில் தயாராகி விட்டால் எதைக் கண்டும் எதற்கு அஞ்ச வேண்டும். இரண்டக மன நிலையில் ஆடுவதை விட வருவது வரட்டும் என்று இயல்பூக்கத்தை வெளிப்படுத்துவது நல்லதுதானே.
இவ்வாறு கூறினார் ரவிசாஸ்திரி.