சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமான படம் 'கனா'. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு, ரமா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கிரிக்கெட் விளையாடி இந்தியாவை ஜெயிக்க வைத்து அப்பாவின் கண்ணீரைத் துடைப்பேன் என்ற லட்சியத்துடன் போராடும் மகளின் கதையே 'கனா'. இப்படத்தைப் பார்த்து பல குடும்பத்தில் தங்களுடைய மகளை கிரிக்கெட் கோச்சிங்கில் சேர்க்க ஆர்வமாகி இருக்கிறார்கள். இதனை இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் நடத்தும் கிரிக்கெட் அகாடமி உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து அஸ்வின் நடத்தும் கிரிக்கெட் அகாடமியில் பணிபுரியும் சுதர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கனாவுக்கு நன்றி. இதுவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெற்றோர்கள் அவர்களது 12-13 வயது மகள்களின் கிரிக்கெட் பயிற்சிக்காக எங்கள் அகாடமியைத் தொடர்பு கொண்டுள்ளனர். நல்ல கரு மக்களை உந்தும் என்பதை இது காட்டுகிறது. வாழ்த்துகள் சிவ கார்த்திகேயென். உண்மையான வெற்றி.
இவ்வாறு சுதர்சன் தெரிவித்துள்ளார்.
இவரது ட்வீட்டுகு அந்தப் படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பதிலளித்து ட்வீட் செய்த போது, ‘Wow tat sounds. Great’ என்று பதிவிட்டுள்ளார்.
இத்தனையாண்டுகளாக விளிம்பு நிலையில் இருந்த மகளிர் கிரிக்கெட் தற்போது பிசிசிஐ-யின் முயற்சியினால் பெரிய அளவில் பெயர் பெற்று விளங்குவது குறிப்பிடத்தக்கது.