விளையாட்டு

விராட் கோலிக்கு ஓய்வு: நியூசி.யுடன் கடைசி இரு ஒருநாள் போட்டி, டி20 தொடருக்கு இல்லை

செய்திப்பிரிவு

நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டித் தொடரில் கடைசி 2 போட்டிகளிலும் டி20 தொடரிலும் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளித்து பிசிசிஐ அறிவித்துள்ளது.

விராட் கோலிக்குப் பதிலாக அணியை வழிநடத்தும் பொறுப்பை ரோஹித் சர்மா ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும் கைப்பற்றி வரலாற்று வெற்றியை இந்திய அணி பெற்றது. அதன்பின் அங்கிருந்து நியூசிலாந்து சென்ற இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

இதில் நேப்பியரில் நேற்று நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. 2-வது போட்டி 26-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கடைசி இரு போட்டிகளுக்கும், டி20 போட்டித் தொடருக்கும் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

''நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கடைசி இரு போட்டிகளில் இருந்தும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்தும் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மா ஏற்பார்.

கடந்த சில மாதங்களாக வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பணிச்சுமை, எதிர்வரும் உலகக் கோப்பைப் போட்டிக்கு தயாராவது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. அதற்கு கோலிக்குப் போதிய ஓய்வு தேவை''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாகப் பந்துவீசிய 21 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஏற்கெனவே நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. கோலிக்குப் பதிலாக மாற்றுவீரர் யாரையும் பிசிசிஐ நிர்வாகம் அறிவிக்கவில்லை.

நியூசிலாந்து தொடர் முடிந்தவுடன் பிப்ரவரி 10-ம் தேதி தாய்நாடு வரும் இந்திய அணிக்கு அடுத்த தொடர் காத்திருக்கிறது. பிப்ரவரி 24-ம் தேதிமுதல் மார்ச் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியா இந்தியாவுக்குப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதன்பின் 10 நாட்களில் ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கிவிடும். மே 30-ம் தேதி முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்கிவிடும்.

SCROLL FOR NEXT