'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் நான் கூறிய கருத்துகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், '' ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் என்னுடைய பதில்கள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதன் எதிர்வினைகளுக்கு நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
உண்மையைக் கூற வேண்டும் என்றால் நான் அந்த நிகழ்ச்சியின் தன்மைக்கேற்றவாறுதான் பதில் அளித்தேன். யாரையும் அவமரியாதை செய்யும் நோக்கில் நான் அதனைக் கூறவில்லை'' என்று பதிவிட்டுள்ளார்.
'காபி வித் கரண்' நிகழ்ச்சி பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுப்பாளராக தொகுத்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள், கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியாவும், கே.எல். ராகுலும் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஹர்திக் பாண்டியா பெண்களைப் பொருளாகப் பார்க்கும் கண்ணோட்டத்தில் பதில் கூறியிருந்தார்.
மேலும், கேள்வி பதில் சுற்றில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் யார் என கேட்கப்பட்டது. இதற்கு சிறிதும் தயங்காமல் கே.எல். ராகுலும், ஹர்திக் பாண்டியாவும் கோலியின் பெயரைக் குறிப்பிட்டனர்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.