மெல்போர்னில் இன்று நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் முதல் முறையாக ஒருநால் போட்டிக்கு தமிழக வீரர் விஜய் சங்கர் அறிமுகமாகியுள்ளார்.
டி20 தொடர் சமனில் முடிந்த நிலையில், டெஸ்ட் தொடரை இந்திய அணி அபாரமாகக் கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் இருப்பதால், கோப்பையை யாருக்கு என்பதை அறிய இன்று 3-வது போட்டியில் இரு அணிகளும்களம் கண்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பெஹரன்டார்ப், நாதன் லயனுக்கு பதிலாக, ஆடம் ஸம்பா, பில்லி ஸ்டான்லேக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி 3 மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. அம்பதி ராயுடுவுக்கு பதிலாக கேதார் ஜாதவ், குல்தீப் யாதவுக்கு பதிலாக யஜுவேந்திர சாஹல், மற்றும் முகமது சிராஜுக்கு பதிலாக விஜய் சங்கரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழக வீரரும், ஆல்ரவுண்டருமான விஜய் சங்கர் இதற்கு முன் இந்திய டி20 அணியில் இடம் பெற்றிருந்தாலும், ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம் பெறுவது இதுதான் முதல் முறையாகும்.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆட்டம் தொடங்கி புவனேஷ் குமார் 2 பந்துகள் வீசிய நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 15 நிமிடங்களுக்குப் பின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
மெல்போர்னில் கடுமையான வெயில் அடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 41 டிகிரிவரை வெயில் அடித்தது, மழையும் பெய்தது. ஆதலால், இன்றைய போட்டியில் மழையின் குறுக்கீடு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவனேஷ் குமார் வீசிய முதல் ஓவரில் ஒரு ரன் மட்டும் ஆஸி. வீர்கள் எடுத்தனர். ஷமி வீசிய 2-வது ஓவரில் காரே பவுண்டரி விளாசினார். 3-வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். 5-வது பந்தில் 2-வது ஸ்லிப்பில் நின்றிருந்த கோலியிடம் கேட்ச் கொடுத்து காரே 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆஸி. அணி 8 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.