விளையாட்டு

விக்கெட் கீப்பிங்கில் தோனி ஒரு விதிவிலக்கு... அவர் பயிற்சி செய்து நான் பார்த்ததில்லை: ரிஷப் பந்த், தோனி வித்தியாசம் குறித்து ஆடம் கில்கிறிஸ்ட்

செய்திப்பிரிவு

விக்கெட் கீப்பிங்கில் ரிஷப் பந்த் நல்ல அடித்தளம் அமைத்துள்ளார், இதிலிருந்து அவர் மேலும் திறம்படச்  செயல்பட வேண்டும். அவர் விக்கெட் கீப்பிங் நம்பிக்கை அளிக்கிறது என்று ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

ரிஷப் பந்த்திடம் நிறைய நம்பிக்கை தெரிகிறது. நன்றாக நகர்கிறார். அவரிடம் நல்ல ஆற்றல் உள்ளது. நல்ல அடித்தளம் அமைந்துள்ளது. இந்தத் தொடரில் இரண்டு டைவிங் கேட்ச்களை அவர் பிடிக்கவில்லை. ஆனால் அவை தவறான அவரது நிலையினால் ஏற்பட்டதல்ல, கிளவ்வினால் கேட்ச்களை விட்டுள்ளார் அவ்வளவே.

ஸ்டம்புக்கு அருகில் நிற்கும் போது பந்தின் பவுன்சுக்கு ஏற்ப அவர் நிமிரவில்லை, கீழிருந்து பந்தின் பவுன்ஸுக்கு ஏற்ப அவர் நிமிர வேண்டும், இதை அவர் கற்றுக் கொள்வார்.

கீப்பிங் என்பது பயிற்சியின் மூலம் மட்டுமே கூர்மையடைய முடியும். ஆனால் எனக்குத் தெரிந்து இதற்கு விதிவிலக்கு தோனி மட்டுமே. அவர் கீப்பிங் பயிற்சி செய்து நான் அதிகம் பார்த்ததில்லை. பயிற்சியில் அவர் கீப்பிங் செய்வதை விட பவுலிங் செய்வதையே பார்த்திருக்கிறேன். எனவே தோனி விக்கெட் கீப்பிங்கில் ஒரு விதிலக்கு.

பேட்டிங்கில் பந்த் ஆட்டத்தைப் பார்க்க உற்சாகமாக இருக்கிறது, தடையற்ற ஒரு மனநிலையில் ஆடுகிறார். பந்து வீச்சை அடித்து ஆடுகிறார், சரளமாக ஆடுகிறார். காலம் செல்லச் செல்ல அவர் தனது ஆக்ரோஷத்துடன் தடுப்பாட்டத்தையும் சரிசம விகிதத்தில் கலப்பார் என்று நம்புகிறேன்.

சஹா வந்து விட்டால் என்ன செய்வதென்பதை பவுலர்கள் தீர்மானிக்க வேண்டும். சஹாவின் உயர்தர விக்கெட் கீப்பிங் தேவையா அல்லது ரிஷப் பந்த்தின் கூடுதல் ரன்கள் தேவையா என்பதை அவர்கள் முடிவெடுக்க வேண்டும், சஹாவும் நல்ல பேட்ஸ்மென் தான்.

டிம் பெய்ன் இப்போதைக்கு உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் ஆவார், அவர் பின்னால் நின்றாலும் ஸ்டம்புக்கு அருகில் நின்றாலும் அவரது பேலன்ஸ் பிரமாதம். மகளிர் கிரிக்கெட்டில் சாரா டெய்லர் மிகப்பிரமாதம். உத்தி ரீதியாக சாரா டெய்லர் மிகப்பிரமாதம்.

80களின் மே.இ.தீவுகள் வேகப்பந்து வீச்சாளர்களை விட தற்போது இந்திய வேகப்பந்து யூனிட் சிறப்பாகச் செயல்படுகின்றனர், அதாவது புள்ளிவிவரங்கள் அடிப்படையில். மே.இ.தீவுகள் பவுலர்களை விடச் சிறந்தவர்கள் என்று கூற முடியாது, ஆனால் பந்து வீச்சு திறம்பட அமைந்துள்ளது.

இந்திய அணியின் திட்டமிடுதல் விதிவிலக்காக அமைந்துள்ளது. மிகவும் ஸ்மார்ட்டாக, விரைவாகச் செயல்படுகின்றனர், சொதப்பிய தொடக்க வீரர்களை நடு தொடரிலேயே நீக்கினர். மெல்போர்னில் அறிமுக வீரரை இறக்கியது தைரியமான ஒரு முடிவு.

விஹாரி 60 பந்துகளை ஆடினார், ஆனால் அவர் செய்த மிகப்பெரிய காரியம் என்னவெனில் இந்தியாவின் விலைமதிப்பில்லா பேட்ஸ்மென் புஜாராவை புதிய பந்து இருக்கும் போது கிரீஸுக்கு வராமல் காத்தார்.

இரு அணிகளில் தாக்கமுடைய வீரர் புஜாராதான், கோலி வேறு ஒரு வகை தாக்கம், ஆனால் புஜாராதான் வித்தியாசம்.  ஆஸ்திரேலிய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பு இன்னும் தரமானதாக வேண்டும்.

இவ்வாறு கூறினார் ஆடம் கில்கிறிஸ்ட்.

SCROLL FOR NEXT