உலகின் அதிவேக மனிதன் என்று செல்லமாக அழைக்கப்பட்டும் ஓட்டப்பந்தய லெஜண்ட், ஜமைக்காவின் உசைன் போல்ட் ஓட்டத்துக்கு அடுத்த படியாக தொழில்பூர்வ கால்பந்தாட்ட வீரராக வேண்டும் என்று கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
ஆஸ்திரேலியாவின் செண்ட்ரல் கோஸ்ட் மரைனர்ஸ் அணியுடன் சேர்ந்து அவர் பயிற்சி பெற்று போட்டியிலும் ஆடினார். ஆனால் கால்பந்தாட்ட வீரராக தான் ஆகும் கனவை தற்போது மூட்டைக் கட்டி விட்டு வர்த்தகத்தை கவனிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜமைக்கா ஊடக வட்டாரங்கள் பலவிதமாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. 8 ஒலிம்பிக் தங்கம் வென்ற உசைன் போல்ட் கடந்த மாதம் கூட கால்பந்தாட்ட வீரனாகும் தன் நம்பிக்கை இன்னமும் உயிருடன் தான் இருக்கிறது என்றார்.
ஆனால் திடீரென, அவர், “சரியாக எதுவும் கையாளப்படவில்லை என்று நான் கூற விரும்பவில்லை, ஆனால் அந்த லட்சியத்தை நோக்கி எந்த வழியில் செல்லக் கூடாதோ அப்படிச் சென்றதாக உணர்கிறேன். நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதனை வாழ்ந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
கால்பந்து ஒரு நல்ல அனுபவமாக இருந்தது, ஒரு அணியில் ஆடியது மகிழ்ச்சியாக இருந்தது இது நிச்சயம் தடகளத்தை விட பெரிய வித்தியாசம் கொண்டது என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் இருந்தவரை கேளிக்கையாக இருந்தது.
என் விளையாட்டு வாழ்க்கை முடிந்து விட்டது, வர்த்தகங்களில் இறங்கலாம் என்று முடிவு எடுத்துள்ளேன். வரிசையில் நிறைய விஷயங்கள் காத்திருக்கின்றன, இப்போது தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற லட்சியம் வந்துள்ளது.