சிட்னியில் நடந்துவரும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமவில் உணவு இடைவேளைக்குப் பின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது.
உணவு இடைவேளைக்கு முன்பு வரை ஓரளவுக்கு நிலைத்து ஆடிய ஆஸி. அணி, அதன்பின் 10 ஓவர்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்து தடுமாறி வருகிறது.
ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
ஹட் 5 ரன்களிலும், ஹேன்ட்ஸ்கம்ப் 4 ரன்களிலும் களத்தில் உள்ளனர். 57 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியைக் காட்டிலும் முதல் இன்னிங்ஸில் 461 ரன்கள் பின்னடைந்துள்ளது ஆஸி.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
2-ம் நாளான நேற்று ஆஸ்திரேலிய அணி ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி, 24 ரன்கள் சேர்த்திருந்தது. ஹாரிஸ் 19 ரன்களிலும், கவாஜா 5 ரன்களிலும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். காலையில் இருந்து விரைவாக கவாஜாவும், ஹாரிஸும் ரன்களைச் சேர்த்தனர். இதனால், 30 நிமிடங்களில் 27 ரன்களும், 30-வது ஓவரில் 100 ரன்களை வேகமாக எட்டியது.
இந்நிலையில் இவர்களைப் பிரிக்க குல்தீப் அழைக்கப்பட்டார். குல்தீப் யாதவ் பந்துவீச்சுக்கு கவாஜா தொடக்கத்தில் இருந்தே திணறி வந்தார். குல்தீப் வீசிய 22 ஓவரில் மிட்விக்கெட்டில் நின்றிருந்த புஜாரவிடம் கேட்ச் கொடுத்து கவாஜா 27 ரன்களில் வெளியேறினார். 72 ரன்களுக்கு முதல் விக்கெட்டை ஆஸி. இழந்தது.
அடுத்தாக ஆல்ரவுண்டர் லாபுசாங்கே களமிறங்கிய ஹாரிஸுடன் இணைந்தார். லாபுசாங்கே சிறப்பாக விளையாடக்கூடியவர், திறமையான பேட்ஸ்மேன் என்று ஊதி பெரிதாகப்பட்ட நிலையில், இந்திய சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளத் தடுமாறினார். அதன்பின் ஓரளவுக்கு நிலைத்து ஆடி அவ்வப்போது பவுண்டரிகள் விளாசினார்.
வேகமாக ரன்களைச் சேர்த்த ஹாரிஸ் 67 பந்துகளில் அரைசதம் அடித்தார். உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது ஆஸி.
உணவு இடைவேளைக்குப்பின் ஆஸ்திரேலிய அணியில் அடுத்தடுத்த விக்கெட் சரிவு ஏற்பட்டது. அடுத்த 10 ஓவர்களில் 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
ஜடேஜா வீசிய 43-வது ஓவரில் ஹாரிஸ் கிளீன் போல்டாகி 79 ரன்களில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு லாபுசாங்கே, ஹாரிஸ் கூட்டணி 56 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்து வந்த ஷான் மார்ஷ், லாபுசாங்கேயுடன் இணைந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மார்ஷ் இந்த முறையும் சொதப்பினார். ஜடேஜா வீசிய 49-வது ஓவரில் முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து மார்ஷ் 8 ரன்களி்ல் ஆட்டமிழந்தார்.
அடுத்த 3 ஓவர்களில் லாபுசாங்கே ஆட்டமிழந்தார். முகமது ஷமி வீசிய 52 ஓவரில் மிட்விக்கெட் திசையில் திசையில் நின்றிருந்த ரஹானேவியிடம் கேட்ச் கொடுத்து லாபுசாங்கே 38 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் என்ற வலுவானநிலையில் இருந்து அதன்பின் 30 ரன்களைச் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.