விளையாட்டு

மீண்டும் ஃபார்முக்கு வர பேட்டிங் பயிற்சியைத் தொடங்கினார் விராட் கோலி

செய்திப்பிரிவு

இங்கிலாந்து தொடருக்கு முன்பாக ‘பில்ட்-அப்’ கொடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சனின் ‘செல்லப் பிள்ளை’யாகி சொதப்பிய விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடருக்காக இப்போதே பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார்.

ஷிகர் தவன், அம்பாத்தி ராயுடு, இஷாந்த் சர்மா, மொகமது ஷமி ஆகியோருடன் கோலி பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்காக இணைந்துள்ளார்.

இங்கிலாந்து தொடரில் சாதாரண ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை ஆடி தொடர்ச்சியாக ஆக்‌ஷன் ரீப்ளே போல் அவுட் ஆன விராட் கோலி ஒரேயொரு அரைசதத்தையே அந்தத் தொடரில் எடுக்க முடிந்தது. அதுவும் டெஸ்ட் போட்டியில் ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை.

தனது ஆஃப் ஸ்டம்ப் ஆட்டச் சிக்கல்கள் தொடர்பாக இந்த மாதத் தொடக்கத்தில் அவர் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரை மும்பையில் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பிட்ச்கள் இந்திய பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அவர் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனாலும் கிமார் ரோச் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கும் அவரது பேட்டிங்கை காலி செய்ய வாய்ப்பிருப்பதால் அவர் பயிற்சியை முன்னதாகவே தொடங்கி விட்டார்.

கோலி கடந்த சில வாரங்களாக மட்டையும் கையுமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் டெல்லி கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் கோலி 18 ஆட்டங்களில் 919 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி: 57.43; இதில் 2 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் எடுத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு எதிராக இங்கு 5 ஒருநாள் போட்டிகள் ஒரு டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

முதல் ஒருநாள் போட்டி கொச்சியில் அக்டோபர் 8ஆம் தேதி தொடங்குகிறது.

SCROLL FOR NEXT