விளையாட்டு

நேதன் லயன் ரிவியூ செய்யாததும், ஸ்டார்க் பேசாமல் இருந்ததும் ஆஸி. மனநிலையைப் பிரதிபலிக்கிறது: ரிக்கி பாண்டிங் வேதனை

செய்திப்பிரிவு

சிட்னி டெஸ்ட் போட்டியில் 236/6 என்று தொடங்கிய ஆஸ்திரேலியா 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோ ஆன் ஆடி வருகிறது, போதிய வெளிச்ச்சமின்மையினால் ஆட்டம் நிறுத்தப்பட்ட போது ஆஸ்திரேலியா 6/0 என்று இருந்தது.

ஆனால் குல்தீப் யாதவ் நேதன் லயனை வீழ்த்திய பந்துக்கு அவர் ரிவியூ கேட்காமல் நேராக பெவிலியன் நோக்கி நடையைக் கட்டியது ரிக்கி பாண்டிங்கின் கோபாவேசத்தை அதிகரித்ததோடு, ஆஸ்திரேலிய வீரர்களின் தற்போதைய மனநிலையையும் அவருக்குப் பிரதிபலித்துள்ளது.

குல்தீப் யாதவ்வின் ஃபுல் லெந்த் பந்தில் லயன் எல்.பி. என்று நடுவர் இயன் கோல்ட் தீர்ப்பளித்தார்.  ஆனால் ரிவியூ செய்திருந்தால் ஒருவேளை லயன் வாங்கியது ஸ்டம்ப் லைனுக்கு வெளியே கூட இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதே ரிக்கி பாண்டிங் வர்ணனையில் தெரிவித்த கருத்தாக இருந்தது.

எதிர்முனையில் மிட்செல் ஸ்டார்க்கும் ரிவியூ செய் என்று லயனுக்கு அறிவுறுத்தவில்லை, இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறும்போது,

“லயன் அவுட் தற்போதைய ஆஸ்திரேலிய வீரர்களின் மனநிலை பற்றி நிறைய செய்திகளை எனக்கு அறிவிக்கிறது. அவர்களுக்கு ஏன் விரக்தி ஏற்பட்டுள்ளது? ஏதாவது செய்து களத்தில்  நிற்கும் எண்ணம் என்பது போய்விட்டது.  ஏன் அந்த அவுட்டை ரிவியூ செய்யவில்லை. 2 ரிவியூவும் கைவசம் உள்ளது. நேரடியாக அவுட் கொடுக்கிறார். மிட்செல் ஸ்டார்க்கும்  ‘எனக்கு என்ன வந்தது? உனக்கு வேண்டுமானால் நீ ரிவியூ கேட்டுக்கொள்’ என்பது போல் கைகழுவினார், ஆனால் இருவர் சேர்ந்து ஆடும்போது அது ஒரு கூட்டணி என்ற மனநிலை எங்கே போனது?

சகவீரரைக் காப்பாற்றுவதற்கு எதிர்முனையில் நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். ஆனால் அங்கு ஆஸி.வீரர்களிடம் எந்த ஒரு அவசமும் இல்லை.

மிட்செல் ஸ்டார்க் ரன்னர் முனையில் நிற்பதைப் பாருங்கள், அவ்வளவு தள்ளி அவர் நிற்க வேண்டிய அவசியமேயில்லை. நேதன் லயன் பார்க்கிறார், அவரோ எனக்குத் தெரியாது என்று நிற்கிறார். நாம் ஏன் ரிவியூ செய்ய வேண்டும் என்று ஸ்டார்க் வாளாவிருந்தார்” என்று ரிக்கி பாண்டிங் அணியின் மனநிலை குறித்து வேதனை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT