விளையாட்டு

சென்னை சிறுவன் சாதனை: நாட்டின் மிக இளம் கிராண்ட் மாஸ்டரானார் குகேஷ்

ராகேஷ் ராவ்

நாட்டின் மிகக் குறைந்த வயது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும், உலகின் 2-வது இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் சென்னையைச் சேர்ந்த டி.குகேஷ் பெற்றார்.

இதன் மூலம் இதற்கு முன் இளம் கிராண்ட் மாஸ்டராக இருந்த சென்னையைச் சேர்ந்த பிரக்னாநந்தாவின் சாதனையையும் குகேஷ் முறியடித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பிரக்னாநந்தா தனது 12 வயது 10 மாதங்கள், 13 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று இருந்தார். ஆனால், தற்போது குகேஷ் தனது 12 வயது 7 மாதங்கள், 17 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.

ஆனால் உலகின் இளம்வயது கிராண்ட் மாஸ்டராக ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். இவர் 2002-ம் ஆண்டு தனது 12 வயது 7 மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைக் கைப்பற்றியிருந்தார். இவரின் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை.

டெல்லியில் நடந்த சர்வதேச ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் 9-வது சுற்றில் தினேஷ் சர்மாவை வீழ்த்தினார் குகேஷ். அப்போது இந்தப் பட்டம் குகேஷுக்கு கிடைத்தது.

தற்போது இந்திய அளவில் மிகக்குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவராக குகேஷ் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பட்டம் வென்ற பிரக்னாநந்தாவும், 2006-ம் ஆண்டு பட்டம் வென்ற பரிமராஜன் நெகியும் உள்ளனர்.

கடந்த 2006-ம் ஆண்டு பிறந்த குகேஷ் தனது  5 வயதில் இருந்து செஸ் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச மாஸ்டராகப் பட்டம் பெற்றார். கடந்த ஆண்டு பாங்காக்கில் நடந்த பாங்காக் ஓபன் போட்டியில் 3-வது இடத்தியும், செர்பியாவின் பாராசின் நகரில் நடந்த ஆர்பிஸ் போட்டியில் 2-ம் இடத்தையும் பெற்றார்.

குகேஷின் தந்தை ரஜினிகாந்த், தாய் பத்மா குமாரி. இருவரும் மருத்துவர்களாக உள்ளனர்.

குகேஷ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றது குறித்து அவரின் தாய் பத்மா குமாரி கூறுகையில், “ ஆண்டு முழுவதும் குகேஷ் செஸ் விளையாடிக்கொண்டே இருப்பார். என் மகனின் செஸ் வாழ்க்கைக்காக எனது கணவர் தனது மருத்துவர் பணியைத் தியாகம் செய்து, அவருக்குத் துணையாக இருந்து வருகிறார்.

குகேஷ் உடன் இருந்து அவனுக்குத் தேவையான உதவிகளையும், பயணத்திட்டங்களையும் எனது கணவர் வகுத்து வருகிறார். குகேஷின் செஸ் வாழ்க்கைக்காக அயராது உழைத்துவரும் எனது கணவருக்கே அனைத்துப் பெருமைகளும் சேரும். குகேஷ் சிறந்த செஸ் வீரராக வர வேண்டும் என்பதுதான் எங்கள் இருவரின் ஆசையாகும்” எனத் தெரிவித்தார்

SCROLL FOR NEXT