இந்தியாவுக்கு எதிரான நடப்பு தொடரில் அடிலெய்ட், மெல்போர்ன், சிட்னி பிட்ச்கள் பற்றி ஆங்காங்கே ஆஸ்திரேலிய முன்னாள், இந்நாள் வீரர்களிடமிருந்து சிலபல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக டிம் பெய்ன் கூற்றுக்கு ஹர்பஜன் சிங், மைக்கேல் வான் பதிலடி கொடுத்துள்ளனர்.
ஆனால் பிட்சில் என்ன இல்லை என்பதல்ல விஷயம், ஆஸ்திரேலிய பேட்டிங்கில் என்ன இல்லை, ஆஸ்திரேலிய பவுலிங்கில் என்ன இல்லை என்பதை அந்த அணி நிர்வாகம் ஆராய வேண்டிய நிலையில் உள்ளது என்று சூசகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார் ஹர்பஜன் சிங்.
முன்னதாக ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறும்போது, “சில பிட்ச்கள் ரோல் செய்யப்பட்டன, இது எங்கள் பலத்தை காலி செய்தது. அதாவது வேகம் மற்றும் பவுன்ஸ் என்பதை இல்லாமல் செய்து விட்டது. வெறுப்பாக இருக்கிறது. இந்தியாவில் நமக்கு பசுந்தரை பிட்ச்களை அளிக்கிறார்களா, இல்லையே. ஆனால் இங்கு அவர்க்ளுக்கு சாதகமாக பிட்ச் அமைக்கிறோம்” என்று கூறியிருந்ததற்கு ஹர்பஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் தன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
பிட்ச்கள் ஃபிளாட்டாக இருப்பதற்கு ஆஸ்திரேலிய அணியினர் நன்றியுடன் இருக்க வேண்டும், அவர்கள் கோரும் பிட்சைப் போட்டிருந்தால் ஆஸ்திரேலிய அணியை இந்தியப் பந்து வீச்சாளர்கள் 175/200 ரன்களில் சுருட்டியிருப்பார்கள்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் தன் உள்நாட்டு கிரிக்கெட்டைத் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உள்கட்டமைப்பை பரிசீலனை செய்யவேண்டியுள்ளது, அப்படிச் செய்தால் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் பொன்னான நாட்கள் மீண்டும் வர வாய்ப்புள்ளது.
என்று பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், தன் தளத்தில், “பிட்ச்களில் ஒன்றுமேயில்லை என்று எப்போதும் குறைகூறிக் கொண்டிருக்க முடியாது, அதுவும் தொடரில் 326 ரன்களைத்தான் அதிகபட்சமாக அடித்து விட்டு...” என்று சாடியுள்ளார்.