விளையாட்டு

தோனியை விட அதிக டெஸ்ட் சதங்களை அடிப்பார்: ரிஷப் பந்த் பேட்டிங்கில் மயங்கிய ரிக்கி பாண்டிங்

செய்திப்பிரிவு

இந்திய இளம் விக்கெட் கீப்பர் இந்தத் தொடரில் விக்கெட் கீப்பிங் சாதனைகளுடன் 159 ரன்கள் எடுத்து பேட்டிங் சாதனையும் நிகழ்த்தியுள்ளது, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களிடமிருந்து பலத்த பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் இணையதளத்தில் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

ரிஷப் பந்த் ஒரு உண்மையான திறமை, அவர் பந்தை அடிப்பதில் மிகச்சிறந்தவராக இருக்கிறார், ஆட்டம் பற்றிய நுண்ண்றிவுத் திறனும் அவருக்கு உள்ளது.  டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக அவருக்கு பயிற்சியளித்த வகையில் நான் அதிர்ஷ்டம் பெற்றவன் என்றே கருதுகிறேன்.

கீப்பிங்கில் இன்னும் கொஞ்சம் அவர் சரியாக வேண்டும், ஆனால் நிச்சயம் சிறந்த பேட்ஸ்மெனாக அவர் திகழ்வார். வர்ணனையில் அவரைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம், நிச்சயம் அவர் இன்னொரு ஆடம் கில்கிறிஸ்ட்தான்.

 நாம் எப்போதும் தோனி பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம், இந்திய கிரிக்கெட்டில் அவர் தாக்கம் பற்றி பேசுகிறோம், அவர் நிறைய டெஸ்ட் போட்டிகளில் ஆடிஉள்ளார், ஆனால் 6 சதங்களைத்தான் அடித்துள்ளார். இந்தச் சிறுவன் ரிஷப் பந்த் நிச்சயம் அவரை விடவும் அதிக சதங்களைக் குவிப்பார்.

ஏற்கெனவே 2 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார், 2 முறை 90 ரன்கள் எடுத்துள்ளார்,  இந்திய அணிக்காக பல வடிவங்களில் அவர் நிறைய போட்டிகளில் ஆடவே போகிறார்.  21 வயதுதான் ஆகிறது அதற்குல் 9வது டெஸ்ட் போட்டிக்கு வந்துள்ளார்.

இவ்வாறு கூறினார் ரிக்கி பாண்டிங்.

SCROLL FOR NEXT