இந்தியாவுக்கு எதிரான நடப்பு தொடரில் ஆஸ்திரேலிய பந்து வீச்சு பலம் வாய்ந்தது என்றும் பேட்டிங்தான் சொதப்பல் என்றும் பலரும் தொடருக்கு முன்னரும் கூறினர், இப்போதும் கூறி வருகின்றனர்.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ பகுப்பாய்வு ஒன்றில் புள்ளிவிவர ரீதியாக 40-80 ஒவர்கள் வரை பழைய பந்தில் இந்திய வேகப்பந்து கூட்டணி பும்ரா, ஷமி, இஷாந்த் வீசிய அளவுக்கு புகழ்பெற்ற கமின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் கூட்டணியினால் வீச முடியவில்லை என்று புட்டுப் புட்டு வைத்தது. நேதன் லயனும் கூட இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பழைய பந்தின் தையலை அற்புதமாகப் பயன்படுத்துவதாக விதந்தோதினார். இதேகருத்தை பாட் கமின்ஸும் ஆதரித்தார்.
மாறாக புதிய பந்தில் இந்திய மூவர் கூட்டணியைக் காட்டிலும் ஆஸி. பவுலர்கள் சிறப்பாக வீசியுள்ளனர் என்றும் புள்ளிவிவரங்கள் கூறினாலும் ஷேன் வார்ன் இதனையும் மறுக்கும் விதமாக தன் ட்விட்டரில் ஆஸ்திரேலிய பேட்டிங் மட்டுமா தடுமாறுகிறது... பந்து வீச்சு என்ன தடுமாறவில்லையா என்று கேட்டு தன் கூற்றுக்கு எளிய சுயதேற்றமாக புள்ளிவிவரம் ஒன்றை உதாரணம் காட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது:
இந்தத் தொடருக்கு இது நல்ல புள்ளிவிவரம் அல்ல. இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் 2592 பந்துகள் வீசியுள்ளனர். இதில் 205 பந்துகள் மட்டுமே ஸ்டம்பைத் தாக்குமாறு சென்றிருக்கக் கூடியதாக அமைந்துள்ளது. இந்தியா 8 எல்.பி.தீர்ப்புகளைப் பெற்றது (பும்ரா மட்டும் 6), ஆஸி. 1 எல்.பி.தான் அதுவும் நேதன் லயன் எடுத்தது. அதாவது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு இந்திய பேட்ஸ்மெனைக் கூட எல்.பி.யில் வீழ்த்தவில்லை என்பதே எதார்த்தம். ஆகவே பேட்டிங் மட்டும் திணறவில்லை என்பது புலனாகிறது.
இவ்வாறு ட்வீட் செய்துள்ளார், இதனை ஆமோதித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் மறு ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.