விளையாட்டு

 உலகக் கோப்பை ஹாக்கியில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் இன்று மோதல்

செய்திப்பிரிவு

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில்  இந்தியா - பெல்ஜியம் அணிகள் இன்று மோதுகிறது.

16 அணிகள் கலந்து கொண்டுள்ள ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது. இதில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது.

இந்த ஆட்டத்தில் முன்கள வீரர்களான மன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், சிம்ரன்ஜித் சிங், லலித் உபாத்யாய் ஆகியோர் கோல் அடித்ததுடன் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி அனைவரையும் ஈர்த்தனர்.

தொடரை வெற்றியுடன் சிறப்பான முறையில் தொடங்கிய இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் பலம் குறைந்த கனடாவுக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வெற்றி பெற்றிருந்தது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் கால் இறுதிக்கு நேரடியாக முன்னேறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளும். தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் பெல்ஜியம் அணிக்கு எதிராக நடுகள வீரரான மன்பிரீத் சிங், டிபன்டர்களான ஹர்மான்பிரீத் சிங், பைரேந்திரா லக்ரா, சுரேந்தர் குமார் மற்றும் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் ஆகியோர் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் வெற்றிக்கான வழியை எளிதில் அடையலாம்.

தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்திய அணி 2013-ம் ஆண்டுக்கு பிறகு பெல்ஜியம் அணிக்கு எதிராக 19 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, ஒரு டிரா, 13 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 5 பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் ஒன்றை மட்டுமே கோலாக மாற்றியது. இதனால் பெனால்டி கார்னர் விஷயத்தில் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

நேரம்: இரவு 7

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

SCROLL FOR NEXT