அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் கெய் நிஷிகோரி, குரேஷியாவின் மரின் சிலிச் ஆகியோர் இறுதிச்சுற்றில் மோதுகின்றனர். இந்த ஆட்டம் இன்று இரவு 2.30 மணிக்கு நடைபெறுகிறது.
2005 ஆஸ்திரேலிய ஓபனில் மாரட் சஃபின், லெய்டன் ஹெ விட்டை தோற்கடித்து சாம்பியன் ஆனார். அதன்பிறகு முன்னணி வீரர்களான ஜோகோவிச், ஃபெடரர், நடால் ஆகியோரில் ஒருவர்கூட இல்லாமல் நடைபெறவுள்ள கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டி, சிலிச்-நிஷிகோரி மோதவுள்ள இந்த போட்டிதான்.
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் சனிக் கிழமை நடைபெற்ற அரை யிறுதியில் போட்டித் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள நிஷிகோரி 6-4, 1-6, 7-6 (4), 6-3 என்ற செட் கணக்கில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார். 104 டிகிரி வெயிலுக்கு மத்தியில் விளை யாடி அபார வெற்றி கண்ட நிஷிகோரி, கிராண்ட்ஸ்லாம் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆசியர் என்ற வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார்.
வெற்றி குறித்துப் பேசிய நிஷிகோரி, “இதுதான் நான் விளையாடிய முதல் கிராண்ட் ஸ்லாம் அரையிறுதி போட்டி. அதனால் ஆரம்பத்தில் கொஞ்சம் பதற்றத்துடன் இருந்தேன். ஆனால் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தியது எனக்கு வியப்பான உணர்வை தந்துள்ளது” என்றார்.
ஜோகோவிச் பேசுகையில், “நிஷிகோரி மிகச்சிறப்பாக ஆடினார். அவருடைய முயற்சிக்காக எனது வாழ்த்துகள்” என்றார்.
சிலிச் அபாரம்
மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள மரின் சிலிச் 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரும் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்தவருமான ஸ்விட்சர் லாந்தின் ரோஜர் ஃபெடரரைத் தோற்கடித்தார்.
இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு வந்திருக்கிறார் சிலிச். ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியதால் கடந்த அமெரிக்க ஓபனில் விளையாடும் வாய்ப்பை இழந்த சிலிச், தனது அரையிறுதியில் 13 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்டார்.
வெற்றி குறித்துப் பேசிய சிலிச், “இப்படியொரு ஆட்டத்தை விளையாட முடியும் என கனவிலும் நான் நினைக்கவில்லை. என்னுடைய வாழ்நாளில் இந்த ஆட்டம்தான் மிகச்சிறந்த ஆட்டம் என நினைக்கிறேன்" என்றார் கடந்த 13 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் ஒற்றையர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் குரேஷிய வீரர் சிலிச்தான். இதற்கு முன்னர் 2001-ல் குரேஷியாவின் கோரன் இவானிசெவிச் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர்தான் இப்போது சிலிச்சின் பயிற்சி யாளராக உள்ளார்.
மகரோவா-வெஸ்னினா ஜோடி சாம்பியன்
மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் ரஷ்யாவின் எக்டெரினா மகரோவா-எலினா வெஸ்னினா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ்-இத்தாலியின் பிளேவியா பென்னட்டா ஜோடி யைத் தோற்கடித்தது.