விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் டாப் அதிவேக அரைசதங்கள்: தோனி முன்னிலை

செய்திப்பிரிவு

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கவுள்ள நிலையில், இந்தத் தொடரில் இதுவரை அடிக்கப்பட்டுள்ள அதிவேக அரைசதங்களில் தோனியின் அதிரடி அரைசதமே முன்னிலை வகிக்கிறது.

சன் ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு எதிராக தோனி இந்த அரைசதத்தை 16 பந்துகளில் அடித்து நொறுக்கினார். பத்ரிநாத் அவுட் ஆனவுடன் 15வது ஓவரில் களமிறங்கிய தோனி முதலில் ஜே.பி. டுமினி வீசிய பந்தை நேராக தூக்கி சிக்சருக்கு அடித்துத் தாக்குதலைத் தொடர்ந்தார்.

ஆனால் அன்று தோனியின் கோபத்திற்குச் சிக்கியவர் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் திசர பெரேரா. ஆட்டத்தின் 18வது ஓவரில் இவர் 34 ரன்களை வாரி வழங்கினார். அவரது மித வேகப்பந்தை 5 சிக்சர்கள் அடித்தார் தோனி.

தோனி மொத்தம் அந்த இன்னிங்ஸில் 8 சிக்சர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார். 19 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். 16 பந்துகளில் அரைசதம் இதுவே சாம்பியன்ஸ் லீக் அதிவேக அரைசத சாதனை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்களில் வெற்றி பெற்றது.

கெய்ரன் பொலார்ட்:

2009ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டியில் கெய்ரன் பொலார்ட் 18 பந்துகளில் அரைசதம் விளாசியது அடுத்த இடத்தில் உள்ளது.

நியுசவுத்வேல்ஸ் அணிக்கு எதிராக டிரினிடாட் டுபாகோ அணிக்கு அவர் இந்த இன்னிங்ஸை ஆடினார். 7 ஓவர்களில் 80 ரன்கள் வெற்றிக்குத் தேவை ஆனால் பொலார்ட் அதிரடியில் 9 பந்துகள் மீதம் வைத்து டிரினிடாட் வென்றது.

18 பந்துகளில் பொலார்ட் 54 ரன்களை 5 சிக்சர் 5 பவுண்டரிகள் உதவியுடன் எடுத்தார்.

கிறிஸ் கெய்ல்:

2011ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டி ஒன்றில் டேவிட் வார்னர் நியுசவுத் வேல்ஸ் அணிக்காக சதம் எடுத்து 3வது அதிவேக அரைசத சாதனையை நிகழ்த்தினார். அப்போது அது 2வது அதிவேக அரைசத சாதனையாக இருந்தது.

ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு 200 ரன்களுக்கு மேல் வெற்றி இலக்கு. கிறிஸ் கெய்ல் இறங்கி 41 பந்துகளில் 92 ரன்களை விளாசினார். அப்போது 20 பந்துகளில் அவர் அரைசதம் கடந்தார். 8 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் இதில் அடங்கும்.

விராட் கோலி இதே போட்டியில் 49 பந்துகளில் 89 ரன்கள் எடுதார். 19வது ஓவரில் 204 ரன்கள் எடுத்து பெங்களூரு வெற்றி பெற்றது.

இதற்கு அடுத்தபடியாக 2013 சாம்பியன்ஸ் லீக் போட்டியில் டிரினிடாட் வீரர் எவின் லூயிஸ் 21 பந்துகளில் எடுத்த அரைசதமும், இதே ஆண்டு ஒடாகோ அணிக்காக ரியான் டென் டஸ்சாதே 21 பந்துகளில் எடுத்த அரை சதமும் உள்ளது.

SCROLL FOR NEXT