விளையாட்டு

நாள் முழுதும் நின்று நங்கூரம் பாய்ச்சினர்: நியூஸி.யை வாட்டி வதைத்த இலங்கையின் மேத்யூஸ், மெண்டிஸ்

செய்திப்பிரிவு

வெலிங்டனில் நடைபெறும் நியூஸிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று ஒரு விக்கெட்டைக் கூட நியூஸி.யினால் வீழ்த்த முடியவில்லை. இலங்கையின் குசல் மெண்டிஸ், ஆஞ்சேலோ மேத்யூஸ் இருவரும் சதமெடுத்தனர்.

3ம் நாள் ஆட்ட முடிவில் 20/3 என்று தடுமாறியது இலங்கை அணி, அதுவும் முதல் இன்னிங்சில் நியூஸிலாந்து அணி 296 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் 20/3 என்று இருந்தால் அது இன்னிங்ஸ் தோல்வியைத்தான் குறிக்கும், ஆனால் 4ம் நாளான இன்று திடீர் திருப்பு முனையாக மேத்யூஸ், குசால் மெண்டிஸ் இருவருமே நங்கூரம் பாய்ச்சி நின்று நாள் முழுதும் விக்கெட் கொடுக்காமல் வெறுப்பேற்றி இலங்கை அணி 259/3 என்று 4ம் நாளை முடித்ததால் ஆட்டம் ட்ரா ஆகும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

4ம் நாள் ஆட்ட முடிவில் மேத்யூஸ் 117 ரன்களுடனும், குசல் மெண்டிஸ் 116 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். மெண்டிஸ் 12 பவுண்டரிகளையும், மேத்யூஸ் 11 பவுண்டர்களையும் அடித்துள்ளனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு நீல் வாக்னர் கடுமையாக ஷார்ட் பிட்ச் சோதனைகளைக் கொடுத்தார், பவுன்ஸர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை, பிட்ச் கடுமையாக மந்தமடைந்தது, ஆனாலும் டிம் சவுதியின் அபாரமான பவுலிங்கையும் குசல் மெண்டிஸ், மேத்யூஸ் அருமையாகக் கையாண்டனர். அஜாஜ் படேல் மதியம் முழுதும் ஒரு முனையில் தொடர்ந்து வீசினார் டைட்டாக வீசினார் விக்கெட் எடுக்க முடியவில்லை.

மெண்டின்ஸ், மேத்யூஸ் ஜோடி 184 ரன்களைச் சேர்ந்து எடுத்துள்ளனர். முதல் செஷனில் மெண்டிஸ் சில அருமையான நேர், மிட்விக்கெட் பவுண்டரிகளை அடித்தார்.  மேத்யூஸ் தைரியமாக உடலை இரும்பாக்கி பல ஷார்ட் பிட்ச் பந்துகளை உடம்பில் வாங்கினார். ஆனாலும் புல்ஷாட்களில் சில பவுண்டரிகளை அடித்தார், சில பவுன்சர்களுக்குக் குனிந்தார். மேத்யூஸ் பார்ம் இலங்கைக்கு குஷியைக் கிளப்பியிருக்கும்.

ஒருமுறை ரன் அவுட் ஆகப்பார்த்தார் மெண்டிஸ், மற்றபடி நாள் முழுதும் விக்கெட் இல்லை.

முதல் இன்னிங்சில் இலங்கை 282 ரன்கள் எடுக்க நியூஸிலாந்து அணியில் தொடக்கத்தில் இறங்கிய டாம் லேதம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 264 ரன்களை எடுத்து உலக சாதனை நிகழ்த்தியதில் நியூஸிலாந்து 578 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை 4ம் நாளில் ஒரு விக்கெட்டைக் கூட கொடுக்காமல் 259/3 என்று உள்ளது.

SCROLL FOR NEXT