விளையாட்டு

எல்லா கிரேட் பேட்ஸ்மென்களிடமும் இருக்கும் அந்த 4 விஷயங்கள் கோலியிடம் உள்ளது: முன்னாள் ஆஸி. வேகப்பந்து வீச்சாளரிடமிருந்து ஒரு அரிய பாராட்டு

செய்திப்பிரிவு

பெர்த் டெஸ்ட் போட்டியில் மிகப்பிரமாதமான 123 ரன்களை எடுத்த விராட் கோலியின் இன்னிங்ஸ் இந்திய அணியின் 146 ரன்கள் வித்தியாச உதையைத் தடுக்க முடியவில்லை என்றாலும் உலகத்தின் சிறந்த சதங்களில் ஒன்று என்பதை மறுக்க முடியாது.

இதைச் சரியாகப் பிடித்த முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு லெஜண்ட் மற்றும் எம்.ஆர்.எஃப் வேகப்பந்து அகாதெமியின் முன்னாள் இயக்குநரும், இந்திய அணிக்கு இன்று வேகப்பந்து வீச்சாளர்கள் தடையின்றி வந்து கொண்டிருக்கின்றனர் என்றால் அதற்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தவருமான டெனிஸ் லில்லி விராட் கோலியின் பேட்டிங்கை விதந்தோதினார்.

பொதுவாக டெனிஸ் லில்லி அவ்வளவு எளிதில் பாராட்டுகளை வழங்குவிடுபவர் அல்ல என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனந்த்பஜார் பத்திரிகாவுக்கு அவர் அளித்த பேட்டியில், “விராட் கோலி ஒரு கிரேட் பிளேயர்,  இதை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை, ஏற்கெனவே அது நிறுவப்பட்ட ஒன்று.  அவரை கிரேட் ஆக ஆக்குவது அவரது உத்தி, உறுதிப்பாடு, பேலன்ஸ், பந்தை அவர் விரைவில் பார்த்து விடுவது, இந்த நான்கும் கூடிவரப்பெற்ற வீரர்களில் விராட் கோலியும் ஒருவர்.

அவர் பந்தை கொஞ்சம் விரைவாகக் கணிக்கிறார். அனைத்து கிரேட் பேட்ஸ்மென்களும், உத்தி, உறுதிப்பாடு, பேலன்ஸ், பந்தை விரைவில் கணிப்பது என்ற 4 முக்கிய அம்சங்களைக் கொண்டிருப்பார்கள். விராட் கோலி நான் பார்த்த பெரிய பேட்ஸ்மென்களுக்குச் சமமானவரே” என்று டெனிஸ் லில்லி ஒர் அரிய புகழாரம் சூட்டியுள்ளார்.

SCROLL FOR NEXT