ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கணுக்கால் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால், பிரித்வி ஷா தொடரில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 31 ரன்களில் வென்றுள்ள இந்திய அணி பெர்த்தில் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் உள்ளன. இதற்கான அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
பயிற்சி ஆட்டத்தின் போது கணுக்காலில் காயம் அடைந்த இளம் வீரர் பிரித்வி ஷா காயத்தில் இருந்து முழுமையாக இன்னும் குணமடையவில்லை என்பதால், அவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம், ஆசியக் கோப்பைப் போட்டியின் போது காயமடைந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா குணமடைந்துவிட்டதால், அவர் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கு சேர்க்கப்பட்டுள்ளார். பிரித்வி ஷாவுக்கு பதிலாக இளம் வீரர் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
கே.எல். ராகுல், முரளிவிஜய் ஆகிய இருவரும் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான தொடக்கத்தை அளித்ததால், மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்து வரும் டெஸ்ட் போட்டியில் விஹாரி, மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கலாம்.
3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் வரும் 26-ம் தேதி பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியாக தொடங்குகிறது.
2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்:
விராட் கோலி(கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே, ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், பர்தீவ் படேல், ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ் குமார், ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால்