மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
முதல் இன்னிங்ஸில் பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் அறிமுக ஆண்டிலேயே சர்வதே அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையையும், இந்திய அளவில் முதல் வீரர் எனும் சாதனையையும் பும்ரா படைத்தார்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 15.5 ஓவர்கள் வீசி 4 மெய்டன் எடுத்து, 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவின் மிகச்சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.
இந்த ஆண்டில் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பும்ரா அறிமுகமானார். அதன்பின் இங்கிலாந்து தொடரிலும், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் விளையாடி வருகிறார் பும்ரா. இந்த 3 நாடுகளுக்கு எதிராகவும் அறிகமுக ஆண்டிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய அணி பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்லாமல் அறிமுக ஆண்டிலேயே டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சர்வதேச அளவில் முதல் வீரர் எனும் பெருமையையும் ஜஸ்பிரித் பும்ரா பெற்று, 39 ஆண்டுகால சாதனையையும் முறியடித்தார்.
இந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஜஸ்பிரி்த் பும்ரா இதுவரை 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதற்கு முன் கடந்த 1970-ம் ஆண்டு இந்திய வீரர் திலிப் தோஷி அறிமுக ஆண்டிலேயே 40 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்தது. அதை தற்போது பும்ரா முறியடித்துள்ளார்.
இந்திய அளவில் 3-வது இடத்தில் வெங்கடேஷ் பிரசாத் 1996-ம் ஆண்டில் 37 விக்கெட்டுகளையும், 1988-ம் ஆண்டில் நரேந்திர ஹிர்வானி 36 விக்கெட்டுகளையும் எடுத்து 4-வது இடத்தில் உள்ளார்.
சர்வதேச அளவில் அறிமுக ஆண்டிலேயே டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் டெரி அல்டிமான் 1981-ம் ஆண்டு 42 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 2-வது இடத்தில் மே.இ.தீவுகள் வேகப்பந்துவீச்சாளர் கர்ட்லி அம்புரோஸ் 1988-ம் ஆண்டு 42 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இவர்கள் இருவரின் சாதனையையும் பும்ரா முறியடித்து சர்வதேசகிரிக்கெட்டில் சாதனை படைத்துள்ளார்.