2019 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் தமிழகத்தின் புதிர் ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி ரூ.8.4 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாபினால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
இவர் தன்னிடம் 7 விதமான பவுலிங்குகள் இருப்பதாகத் தெரிவித்தார். ஆஃப் பிரேக், லெக் பிரேக், கூக்ளி, கேரம் பால், ஃபிளிப்பர், டாப் ஸ்பின்னர், யார்க்கர்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) டி20 கிரிக்கெட்டில் சைசெம் மதுரை பேந்தர்ஸ் அணி முதல் முதலாக 2018- ல் கோப்பையை வெல்ல இவரது ஸ்பின் மிக முக்கியப் பங்களிப்பு செய்தது. சிஎஸ்கே வலைப்பயிற்சியில் பவுலிங் செய்துள்ளார். புனேயில் கேகேஆர் வலைப்பயிற்சியிலும் வீச இவரை தினேஷ் கார்த்திக் அழைத்தார்.
மைக் ஹஸ்சி இவரை மிகப்பிரமாதமான திறமை உடையவர் என்று டி.என்.பி.எல் கிரிக்கெட் வர்ணனையில் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன் சிங் தன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு சிஎஸ்கே வலைப்பயிற்சியில் நெருக்கமாக வருண் சக்ரவர்த்தி வீசியதைப் பார்த்தேன். இந்த வருண் சக்ரவர்த்தி இந்திய அணிக்கு ஆடும் அபாரத் திறமை படைத்தவர். தேர்வுக்குழுவினர் இவர் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். வேகமும் ஆவேசமும் நிறைந்த ஸ்பின் பவுலர். இன்னொரு புதிர் ஸ்பின்னர்.
என்று தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.