என்னிடம் என்ன தவறு இருக்கிறது, எதற்காக என்னை எடுக்கவில்லை என்று மேற்கு வங்க வீரர் மனோஜ் திவாரி ட்விட்டரில் பிசிசிஐ அமைப்பை வறுத்தெடுத்துப் புலம்பியுள்ளார்.
2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது. 8 அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற இந்த ஏலத்தில் 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்களும், 300க்கும்மேற்பட்ட உள்நாட்டு வீரர்களும் பங்கேற்றனர்.
இந்த ஏலத்தில் பெரும்பாலும் இளம் வீரர்களுக்கே அதிகமான முக்கியத்துவம் கொடுத்து அணி நிர்வாகத்தினர் ஏலம் எடுத்தனர். இந்திய அணிக்குள் இடம் பெறாத இளம் வீரர்களுக்குக் கூட அவர்கள் எதிர்பாராத விலைகொடுத்து அணி நிர்வாகங்கள் ஏலத்தில் எடுத்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தின.
அதேசமயம், முக்கிய நட்சத்திர வீரர்கள் தங்களை அதிகமான விலைக்கு எடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அதிர்ச்சி அளிக்கும் விதமாகப் பல வீரர்களை அணி நிர்வாகத்தின் சீண்டக்கூட இல்லை. அதில் குறிப்பாக மெக்கலம், கப்தில், சட்டீஸ்வர் புஜார், மனோஜ் திவாரி உள்ளிட்ட பலர் அடங்குவர்.
இதில் ஏலம் தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து அணி நிர்வாகத்தினராலும் புறக்கணிக்கப்பட்டவர் மனோஜ் திவாரி ஆவார். 33 வயதான மேற்கு வங்க கிரிக்கெட் அணியின் கேப்டன் மனோஜ் திவாரி இதற்கு முன் 10 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருந்த நிலையில் அவரை இந்த முறை எந்த அணி நிர்வாகத்தினரும் ஏலம் எடுக்கவில்லை.
மனோஜ் திவாரி இதற்கு முன் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் உள்ளிட்ட அணிகளில் இடம் பெற்று விளையாடியுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக விளையாடிய மனோஜ் திவாரி 15 போட்டிகளில் விளையாடி 300 ரன்கள் வரை குவித்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியில் இடம் பெற்ற மனோஜ் திவாரி இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக வின்னிங் ஷாட் அடித்து அணியை வெற்றி பெற வைக்க முக்கியக் காரணமாக இருந்தார்.
இந்திய அணிக்காக இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மனோஜ் திவாரி ஒரு சதம், அரை சதம் உள்ளிட்ட 287 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த நிலையில், அனுபவம் வாய்ந்த மனோஜ் திவாரியை நேற்றைய ஏலத்தில் எந்த அணியும் சீண்டிக்கூட பார்க்காதது அவரை வேதனையில் ஆழ்த்தியது.
இதுகுறித்து ட்விட்டரில் மனோஜ் திவாரி வேதனையுடன் கருத்துத் தெரிவித்துள்ளார்.அதில், ''என்நாட்டுக்காக நான் கிரிக்கெட் விளையாடி 104 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றுள்ள நிலையில், என்னிடம் என்ன தவறு இருக்கிறது என்று நீக்கினீர்கள். நான் என்ன தவறு செய்தேன் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
ஒரு போட்டியில் நான் சதம் அடித்தவுடன், அடுத்த 14 போட்டிகளுக்கு என்னை நீக்கினார்கள். கடந்த 2017-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் நான் பெற்ற விருதுகளைப் பார்த்தீர்கள்தானே. அதன்பின்பும் என்னை அணியில் சேர்க்கவில்லை. என்னிடம் என்ன தவறு இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது'' என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.