விளையாட்டு

இந்தப் பிட்சில் விக்கெட் எடுக்காமல் வீசுவதுதான் கடினம்... கோலியின் களவியூகம்: மைக்கேல் கிளார்க்கின் கூர்மையான பார்வை

செய்திப்பிரிவு

பெர்த் பிட்ச் புற மைதானத்துக்கும் 22 யார்டு பிட்சுக்கும் இடையே வித்தியாசம் தெரியாத கிரீன் டாப் பிட்சாக அமைந்தது ஆனால் இந்திய அணியினர் சூழ்நிலையை தவறாகக் கணித்து ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர் இல்லாமல் களமிறங்கினர்.

மேலும் பிட்ச் எல்லாவற்றையும் செய்யும் நாம் சும்மா லெந்தில் வீசினால் போதும் என்று முடிவெடுத்து வேகமாக வீசும் பும்ரா கூட முதல் 2 மணி நேர ஆட்டத்தில் 132 கிமீ முதல் 135 கிமீ வரைதான் வீசினார், இஷாந்த் சர்மாவுக்கு லைன் அண்ட் லெந்தே கிடைக்கவில்லை. அவர் அனாலிசிசைப் பார்த்து நாம் ஏமாந்து விடக்கூடாது.

இந்நிலையில் வர்ணனையில் மைக்கேல் கிளார்க், கூறும்போது இந்திய அணியின் பந்து வீச்சில் ஆக்ரோஷம் இல்லை, இத்தகைய வேக, எகிறு பிட்ச்களில் கூடுதல் வேகத்துடன் பந்துகளை வீசினால்தான் பேட்ஸ்மென்களை ஆட வைக்க முடியும். முதலில் பேட்ஸ்மென்களை ஆட வைக்க வேண்டும், அப்போதுதான் விக்கெட் விழும்.

ஸ்டம்ப்கள், 4வது ஸ்டம்ப் லைனில் வீசினால் விக்கெட் எடுக்காமல் இருப்பதுதான்  கடினம் என்று மைக்கேல் கிளார்க் கூறினார், அப்போது இந்தியப் பந்து வீச்சு திணறிக் கொண்டிருந்தது.

அதே போல் பவுலர்கள் சரியாக வீசாத போது அவர்களுக்கு உத்வேகம் கொடுக்க வேண்டிய கோலி, களவியூகத்தைத் தளர்த்தி டீப் பாயிண்ட் ,  கவர்  ஆகியவற்றை வைத்து வீசியதையும் மைக்கேல் கிளார்க் விமர்சித்தார்.

உதாரணமாக உஸ்மான் கவாஜா இறங்குகிறார், அவருக்கு 3வது ஸ்லிப்பைப் போட்டு நெருக்கடிக் கொடுக்காமல், அதுவும் அப்பொது பவுலர்கள் நன்றாக வீசத் தொடங்கி இருந்தனர். அப்போது கவர் திசையில் பீல்டரைத்தள்ளி நிறுத்தினார் கோலி.

கிளார்க் என்ன கூறுகிறார் என்றால் கவர் பீல்டரை இன்னும் 10-15 அடி முன்னால் வரவைத்து ஃபுல் லெந்த்தில் வீசி ட்ரைவ் ஆட வைக்க வேண்டும், அல்லது நெருக்கமாக பீல்ட் அமைத்து நெருக்கடி கொடுத்தால்தான் பேட்ஸ்மென் வித்தியாசமாக ஏதாவது முயற்சி செய்வார்கள் விக்கெட்டை இழப்பார்கள் என்பதுதான் கான்செப்ட் என்றார்.

அதே போல் ட்ராவிஸ் ஹெட், ஷான் மார்ஷ் நல்ல கூட்டணி அமைத்த போதும் விராட் கோலி வித்தியாசமாக, கற்பனை வளத்துடன் கேப்டன்சி செய்யவில்லை என்பதே விமர்சனமாக உள்ளது.

SCROLL FOR NEXT