‘எப்படியாயினும் வெற்றிதான் குறிக்கோள்’ என்ற விஷவிதையை விதைத்தவர்கள் கிரிக்கெட் ஆஸ்திரேலிய உயரதிகாரிகள் ஜேம்ஸ் சதர்லேண்ட், பாட் ஹோவர்ட் ஆகியோர்களே, இதுதான் பந்தைச் சேதப்படுத்தியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியதாக முன்னால் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் புதியக் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட மூவரில் ஒருவரான பேங்கிராப்ட், இன்று ஃபாக்ஸ் கிரிக்கெட் ஆடம் கில்கிறிஸ்ட் நேர்முகத்தில் பால் டேம்பரிங்குக்கு முக்கியக் காரணம் டேவிட் வார்னர்தான் என்று போட்டு உடைத்தார்.
இதனையடுத்து இதே ஃபாக்ஸ் கிரிக்கெட்டுக்காக ஸ்மித்தையும் பேட்டி கண்டார் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், அதில் ஸ்மித் கூறியதாவது:
“நவம்பர் 2016 என்று நினைக்கிறேன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஹோபார்ட் டெஸ்ட்டில் தோல்வி அடைகிறோம். இலங்கைக்கு எதிராக 3 டெஸ்ட் தோல்விகளுக்குப் பிறகு 5வது நேரடி தோல்வியாக ஹோபார்ட் அமைந்த சமயம். அப்போது ஜேம்ஸ் சதர்லேண்ட், பாட் ஹோவர்ட் வீரர்கள் அறைக்கு வந்து ‘வெற்றி பெறவே உங்களுக்குச் சம்பளம், வெறுமனே விளையாட மட்டுமல்ல’ என்று கூறினார்.
இது கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்தது, யாரும் தோற்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு களமிறங்குவதில்லை.
இப்போது பண்பாடு என்றெல்லாம் பேசும்போது இங்கு ஆஷஸ் தொடரில் 4-0 என்று வென்ற போது பண்பாடு நன்றாக இருந்தது என்றே கூறப்பட்டது. இப்போது உடனடியாக எல்லாம் மாறிப்போய்விட்டது, பண்பாடு கெட்டு விட்டது என்றெல்லாம் பேசுகிறோம். நிச்சயமாக கேப்டவுன் பால் டேம்பரிங்குக்குப் பிறகே மக்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் பண்பாடு தேய்ந்து விட்டது என்று கூறினார்கள். மக்கள் அப்படித்தான் நினைப்பார்கள். ஆனால் பண்பாடு மோசமடைந்ததாக நான் நினைக்கவில்லை.
இப்போதைக்கு அணியின் கேப்டனாக வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை, மீண்டும் ஆஸ்திரேலியாவுக்காக ஆடவேண்டுமென்பதே பிரதானம். டிம் பெய்ன் தலைமையின் கீழ் ஆடவும் விருப்பமாகவே இருக்கிறேன். உலகக்கோப்பையில் பிஞ்ச் தலைமையில் ஆடவும் விரும்புகிறேன். இப்போதைக்கு இதுதான் என் குறிக்கோள் அதை நோக்கித்தான் ஆடிக்கொண்டிருக்கிறேன்” என்றார் ஸ்டீவ் ஸ்மித்