மெல்போர்னில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருக்கிறது
அறிமுகப் போட்டியில் களமிறங்கிய இளம் வீரர் மயங்க் அகர்வால் 76 ரன்கள் சேர்த்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
மெல்போர்ன் ஆடுகளத்தில் இன்றைய முதல்நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை 'தண்ணிகுடிக்க' வைக்கும் அளவுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் திணறவிட்டனர். விக்கெட்டுகளை எளிதாக இழக்காமல் மிகவும் நிதானமாக பேட் செய்தனர்.
முதல்நாள் ஆட்டத்தில் விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது என்ற அக்கறையோடு இந்திய பேட்ஸ்மேன்கள் பேட் செய்தது தெரிந்தது. அதேசமயம், மாலை தேநீர் இடைவேளைக்குப் பின் சிறிது அதிரடி ஆட்டம் ஆடி இருந்தால், இன்னும் 50 ரன்கள் கூடுதலாக கிடைத்திருக்கும்.
ஆட்டநேர முடிவில் 89 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்துள்ளது இந்தியஅணி. கேப்டன் விராட் கோலி 48 ரன்களுடனும், புஜாரா 68 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஏற்கெனவே ஆலோசிக்கப்பட்டு இருந்ததுபோல், தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி களமிறங்கினர்.
முரளிவிஜய், ராகுல் போல் அவசரப்பட்டு எந்தப் பந்தையும் தொட்டு விக்கெட்டை பறிகொடுக்கவில்லை. ஹனுமா விஹாரி தனது முதல் ரன்னை 25 பந்துகள் சந்தித்தபின்தான் எடுத்தார்.
வெளிநாடுகளில் இந்த ஆண்டு நடந்த 11 டெஸ்ட் போட்டிகளில் 5-வது தொடக்க ஜோடி மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டனர். வெறுப்படைந்த ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் 19-வது ஓவரில் ஒரு பவுன்ஸர் வீசினார்.
அது விஹாரியின் ‘ஹெல்மெட்டில்’பட்டு எகிறியது. அடுத்த பந்தில் ஆரோன் பிஞ்சிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் வெளியேறினார் விஹாரி. முதல் விக்கெட்டுக்கு இருவரும் 40 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
ஆஸ்திரேலியாவில் கடந்த 5 இன்னிங்ஸில் தொடக்க ஜோடி சேர்த்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆண்டுகளுக்குப்பின்
கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பின் தொடக்க ஜோடி அதிகமான பந்துகளை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் விளையாடியபோது சந்தித்தது இதுதான் முதல்முறையாகும். கடைசியாக சென்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சேவாக், கம்பீர் தொடக்க ஜோடி 29.3 ஓவர்கள் நின்று பேட் செய்தனர்.
அதன்பின் 8 ஆண்டுகளுக்குப் பின் வெளிநாடுகளில் இன்றுதான் 18.5 ஓவர்கள் நின்று இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால், விஹாரி ஜோடி நின்று பேட் செய்துள்ளனர்.
அடுத்து புஜாரா களமிறங்கி, அகர்வாலுடன் சேர்ந்தார். இருவரும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்றார்போல் நிதானமாக விளையாடினார்கள். அனுபவம் மிக்க பேட்ஸ்மேன் போல் கால்களை நகர்த்தியும், பிரன்ட்புட் ஷாட்களையும், பேக்புட் ஷாட்களையும் ஆடி பந்துகளை நேர்த்தியாக எதிர்கொண்டார்.
அதிலும் லயன் பந்துவீச்சை மிகவும் எளிதாக எதிர்கொண்டார்.லயன் பந்துவீச்சை கிரீஸை விட்டு இறங்கிவந்து ஆடியதால், மயங்க் அகர்வாலுக்கு எப்படிப் பந்துவீசுவது எனத் தெரியாமல் லயன் திணறினார். இதனால், உணவுஇடைவேளை வரை 6 ஓவர்கள் வரை கொடுத்துவிட்டு நிறுத்திவிட்டனர்.
உணவுஇடைவேளைக்குப்பின் பந்துவீசிய லயன் ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்து சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது முதலாவது அரைசதத்தைப் பதிவு செய்தார் அகர்வால். லயன் வீசிய 48-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும் மயங்க் அகர்வால் பறக்கவிட்டு அவரின் நம்பிக்கையை உடைத்தார்.
கம்மின்ஸ் வீசிய 55-வது ஓவரில் பைனிடம் கேட்ச் கொடுத்து 76 ரன்களில்(161பந்துகள்) மயங்க அகர்வால் வெளியேறினார். இவரின் கணக்கில் ஒரு சிக்ஸர்,8 பவுண்டரிகள் அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 83 ரன்கள் சேர்த்தனர்.
புதிய வரலாறு
அதுமட்டுமல்லாமல் புதிய வரலாற்றையும் மயங்க் அகர்வால் படைத்தார். ஆஸ்திரேலியாவில் அறிமுகப்போட்டியில் கடந்த 71 ஆண்டுகளாக எந்த வீரரும் அரைசதம் அடித்தது இல்லை. கடந்த 1947-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியப் பயணத்தில் சிட்னியில் நடந்த போட்டியில் இந்திய வீரர் டட்டு பட்கர் 51 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை மயங்க் அகர்வால் உடைத்து அதிகபட்சமாக 76 ரன்களைப் பதிவு செய்தார்.
3-வது விக்கெட்டுக்கு கோலி, புஜாரா இருவரும் இணைந்தனர். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வெறுப்பேற்றும் அளவுக்கு இருவரும் பேட் செய்தனர். ஓவர் பிட்சாக வந்த பந்தைக் கூட கோலி அடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
நிதானமாக ஆடிய புஜாரா 152 பந்துகளில் அரைசதம் அடித்தார். மாலை தேநீர் இடைவேளைக்குப் பின் புதிய பந்து மாற்றப்பட்டது. ஆடுகளமும் வெயிலுக்கு நன்கு காய்ந்து, வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கத் தொடங்கியது. இந்திய அணி 200 ரன்களைக் கடந்தது.
மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய 87-வது ஓவரில் கோலி விக்கெட்டை இழந்திருப்பார் அந்த அளவுக்குப் பந்துகள் எகிறத்தொடங்கின.விராட் கோலி கால்காப்பில் யார்கரை பந்தை வாங்கினார் ஆனால், ஆட்டமிழக்கவில்லை. அடுத்த பந்து பீட்டன் ஆனது, 4-வது பந்து போல்ட் ஆக வேண்டிய நிலையில் தப்பினார் கோலி.
2-ம்நாள்ஆட்டத்தில் சுவாரஸ்யம்
ஆடுகளம் காய்ந்து வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கத் தொடங்கி இருக்கிறது. ஆதலால்,நாளைய ஆட்டம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும், நாளைக் காலையில் ஆட்டத்தைத் தொடங்கும்போது புதிய பந்துக்கும், ஆடுகளத்தையும் கணித்து விக்கெட் விழாமல் ஆடுவது அவசியமாகும். இன்றைய ஆட்டத்தைக் காட்டிலும் நாளைய 2ம் நாள் ஆட்டத்தில் சுவாரஸ்யம் இன்னும் அதிகரிக்கும் என நம்பலாம்.