விளையாட்டு

பதிலடி முனைப்பில் சென்னையின் எப்சி

செய்திப்பிரிவு

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி அணி, அட்லடிகோ டி கொல்கத்தா அணியுடன் மோதுகிறது.

நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி அணி இந்த சீசனில் கடுமையாக திணறி வருகிறது. வலுவில்லாத டிபன்ஸ் மற்றும் உத்வேகம் இல்லாத முன்களம் ஆகியவற்றால் வெற்றிக்கான வழிகளை கண்டறிய முடியாமல் பயிற்சியாளர் ஜான் கிரகோரி நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை அணி ஒரு வெற்றி, 2 டிரா, 6 தோல்விகளுடன் 5 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடம் வகிக்கிறது.

கேரளா அணிக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கோல் அடிக்க கிடைத்த பல வாய்ப்புகளை சென்னை வீரர்கள் வீணடித்தனர். ஜெ ஜெ லால்பெகுலா இதுவரை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது கடும் பின்னடைவாக உள்ளது.

கொல்கத்தா அணி 9 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 டிரா, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. தடுமாறி வரும் சென்னை அணிக்கு எதிராக இந்த சீசனில் மீண்டும் ஒரு வெற்றியை பெறும் முனைப்புடன் இன்றைய ஆட்டத்தை அந்த அணி சந்திக்கிறது. இந்த சீசனில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் 1-2 என்ற கணக்கில் சென்னையின் எப்சி அணி தோல்வி கண்டிருந்தது. இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி பதிலடி கொடுக்க முயற்சி செய்யக்கூடும்.

SCROLL FOR NEXT