அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி தழுவியதையடுத்து ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கடும் ஏமாற்றமடைந்ததாகத் தெரிவித்தார்.
தோல்விக்கானக் காரணங்களை அவர் கூறும்போது மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் தீப்பொறியெல்லாம் பறக்கவில்லை, உண்மையில் நல்ல பார்மில் இருக்கிறாரா இல்லையா? எனக்குத் தெரிந்து இல்லை என்று கூறியது பரபரப்பாகியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் முதலில் கமாண்டிங் கேப்டன் இருந்தால்தான் வேகப்பந்து வீச்சை மேய்க்க முடியும், மைக்கேல் கிளார்க் போல ஒரு ஆகிருதி தேவை, டிம் பெய்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
இந்நிலையில் தோல்விக்கான காரணங்கள் பற்றி டிம் பெய்ன் கூறியதாவது:
ஏன் தோற்றோம் என்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இந்திய அணியை முதல் நாள் ஆட்டத்தில் 200-210க்கு மட்டுப்படுத்தி விடலாம் என்று எண்ணினோம். அதிலிருந்து கொஞ்சம் நழுவியது.
மேலும் முதல் இன்னிங்சில் நாங்கள் 230+க்கும் அதிகமாக ரன்கள் எடுத்திருக்க வேண்டும். இது போன்ற சில விஷயங்களை இன்னும் கொஞ்சம் இறுக்க வேண்டியுள்ளது. மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் தீப்பொறியெல்லாம் ஒன்றும் பறக்கவில்லை. நீண்ட நாட்களாகவே ஸ்டார்க்கின் சிறந்த பந்து வீச்சுக்கும் மோசமான பந்து வீச்சுக்கும் இடையே நிறைய இடைவெளி உள்ளது.
மேலும், நான் பார்த்த வரையில், அவர் உண்மையில் சிறந்த ஃபார்மில்தான் இருக்கிறாரா என்ற எண்ணம் என் மனதில் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அவர் சிறந்த பார்மில் இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஆனாலும் அவர் பங்கை அவர் ஆற்றினார்.
பெர்த் போட்டியில் அணியில் பெரிய மாற்றமெல்லாம் இருக்காது, இருந்தாலும் கோச் லாங்கர் என்ன கூறுகிறார் என்று பார்க்க வேண்டும்.
இவ்வாறு கூறினார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்.