ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுவ பாரதி கிரங்கன் மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சிட்டி எப்சி - மோகன் பகன் அணிகள் மோதுகின்றன.
சென்னை சிட்டி அணி இந்த சீசனில் சிங்கப்பூரைச் சேர்ந்த பயிற்சியாளரான அக்பர் நவாஸ் மேற்பார்வையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, ஒரு டிராவுடன் 16 புள்ளிகளை குவித்து பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தோல்வியை சந்திக்காமல் வலம் வரும் சென்னை சிட்டி அணி இன்று, பலம் வாய்ந்த மோகன் பகன் அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது.
மோகன் பகன் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்று பட்டியலில் 4-வது இடம் வகிக்கிறது. தனது கடைசி ஆட்டத்தில் சொந்த மண்ணில் 0-3 என்ற கோல் கணக்கில் சர்ச்சில் பிரதர்ஸ் அணியிடம் தோல்வியடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது மோகன் பகன் அணி.
மோகன் பகன் அணி இந்த சீசனில் 6 கோல்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது. மேலும் அந்த அணி இன்னும் கைவசம் ஆட்டங்களை வைத்துள்ளது. இவை இரண்டு மட்டுமே மோகன் பகன் அணிக்கு சாதகமான விஷயமாக கருதப்படுகிறது. இரு அணிகளும் இதற்கு முன்னர் 3 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் மோகன் பகன் அணி இரு வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் பதிவு செய்துள்ளது.
சென்னை அணியில் ஸ்பெயினைச் சேர்ந்த நெஸ்டர் ஜீசஸ், பெட்ரோ மான்ஸி, சான்ட்ரோ ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட நால்வர் கூட்டணி பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.
அதேவேளையில் உள்ளூர் வீரர்களான ரோமரியோ ஜேசுராஜ், லூர்துசாமி, அஜித் காமராஜ் ஆகியோரும் சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகின் றனர். இன்றைய ஆட்டத்திலும் இவர்கள் எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து வெற்றியை தொடரச் செய்வதில் முனைப்பு காட்டக்கூடும்.