அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் சுமார் ரக ஆஸ்திரேலிய அணி தோல்வி கண்டதையடுத்து, ஆஸ்திரேலிய அணி தன் அடையாளத்தை இழக்கக் கூடாது, அந்த அணி தன் பாணியில் வழக்கமாக எப்படி ஆடுமோ அப்படி ஆடுவதில்தான் அதன் சிறப்பு உள்ளது என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கம்பீரே மோதல் போக்கு உள்ள கிரிக்கெட் வீரர்தான், இவருக்கும் ஷேன் வாட்சனுக்கும் அவ்வளவாக ஆகாது, இருவரது கள சேட்டைகள் இன்று வரை பிரசித்தமானது.
இந்நிலையில் அனைத்துக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற கம்பீர் கூறியதாவது:
ஆஸ்திரேலிய வீரர்கள் இதுகாறும் எப்படி ஆடிவந்தனரோ அப்படியே தொடர்வதுதான் நல்லது. ஒரே ஒரு மோசடி விவகாரத்தினால் அவர்களது முழு அடையாளத்தையும் மாற்றி விட முடியாது. அவர்கள் ஆக்ரோஷமாக ஆடும்போதுதான் சிறப்பாக ஆடியுள்ளனர். தனிப்பட்ட தாக்குதல் இல்லாமல் சிறு கேலிகள் செய்வதால் தீங்கொன்றும் இல்லை.
மனிதர்கள் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது, காட்டித்தான் தீர்வார்கள், ரோபோக்களால் தொழில்பூர்வ விளையாட்டை விளையாட முடியாது.
என்னை ஸ்லெட்ஜிங் செய்துள்ளனர், நானும் ஸ்லெட்ஜ் செய்துள்ளேன். ஆஸ்திரேலியர்கள், தென் ஆப்பிரிக்கர்கள் மட்டுமல்ல இந்திய அணியும் ஸ்லெட்ஜ் செய்யவே செய்யும்.
சிறு சிறு கேலிகள், கிண்டல்கள் களத்தில் எப்போதும் நல்லது, அனைவரையும் விழிப்புடன் இருக்கச் செய்வது. ஆஸ்திரேலியா அணி பால் டேம்பரிங் தவறைச் செய்தது, நாம் அதற்காக பெரிய கூப்பாடு போட வேண்டாமே.
இந்தத் தொடரில் முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றிருப்பது இதற்கு முந்தைய பயணங்களில் இல்லை, இதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் ஆஸ்திரேலியாவை நாம் எளிதாக எடைப் போட்டு விடக்கூடாது. அவர்களிடம் இன்னமும் எதிரணியினரை காயப்படுத்தும் பந்து வீச்சு உள்ளது.
தொடக்க வீரர்களிடம் பொறுமை காக்க வேண்டும், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் பந்தை எதிர்கொள்வது அவ்வளவு சுலபமானதல்ல. இது எளிதானதாக இருந்தால் எல்லோருமே செய்ய முடியுமே! 10,000, 15,000 ரன்கள் எடுத்த மகா வீரர்கள் தொடக்க வீரர்கள் அல்ல.
நான் வீரர்களை பாதுகாப்பதை ஆதரிப்பவன், டெஸ்ட் கிரிக்கெட்டில் போய் ரொடேட் செய்கிறேன் பேர்வழி என்று அணுகினால் அது வீரர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மையையே அளிக்கும். அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிக் கொண்டேதான் இந்த மட்டத்துக்கு அவர்கள் தகுதியுடையவர்களா என்பதை முடிவு செய்ய வேண்டும். அனைவருக்கும் நியாயமாக நடக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார் கம்பீர்.