பெர்த்தில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அற்புதமான சதம் விளாசி புதிய சாதனையைப் படைத்தார்.
சர்வதேச அளவில் கோலி அடிக்கும் 63-வது சதம் இதுவாகும். சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள், பாண்டிங்கின் 71- சதங்களுக்கு அடுத்த இடத்தில் கோலி உள்ளார். மேலும், 2 காலண்டர் ஆண்டில் 11 சர்வதேச சதங்கள் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் கோலி என்ற புதிய சாதனையைப் படைத்தார்.
பெர்த்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி நேற்றை ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 69 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்திருந்தது. கேப்டன் விராட் கோலி 82 ரன்களுடனும், ரஹானே 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இருவரும இன்றைய 3-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே லயன் பந்துவிச்சீல் விக்கெட் கீப்பர் பெய்னிடம் கேட்ச் கொடுத்து ரஹானே 51 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஹனுமா விஹாரி களம் புகுந்தார்.
விராட் கோலியுடன் இணைந்து விஹாரி நிதானமாக பேட் செய்தார் அவ்வப்போது பவுண்டரிகள் சில அடித்தார். புதிய பேட்ஸ்மேன், புதிய ஆடுகளம் என்கிற பதற்றம் ஏதுமின்றி நிதானமாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சை விஹாரி கையாண்டது சிறப்பாகும்.
ஒரு புறம் சதத்தை நோக்கி விராட் கோலி முன்னேறினார். மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய 80-வது ஓவரில் ஸ்டிரைட் டிரைவில் ஒரு பவுண்டரி அடித்து விராட் கோலி, டெஸ்ட் அரங்கில் தனது 25-வது சதத்தை நிறைவு செய்தார்.
சர்வதே டெஸ்ட் அரங்கில் விராட் கோலி அடிக்கும் 25-வது சதமும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் அடிக்கும் 6-வது சதமாகும். 2012-ம் ஆண்டு ஒரு சதமும், 2014-ம் ஆண்டு 4 சதமும் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், டெஸ்ட் போட்டியில் மிகவேகமாக 25 சதங்களை அடித்த முதல் இந்திய வீரர் விராட் கோலி ஆவார். சர்வதேச அளவில் டான் பிராட்மேனுக்கு அடுத்தார்போல் 2-வது வீரர் விராட் கோலி ஆவார்.
விராட் கோலி 128 இன்னிங்ஸ் 76 போட்டிகளில் தனது 25-வது சத்தை எட்டியுள்ளார். பிராட்மேன் 52-வது போட்டியில் 25-வது சதம் அடித்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்திய அளவில் சச்சின் டெண்டுல்கர் 130 இன்னிங்ஸில் தனது 25-வது சதத்தை எட்டி இருநதார், சுனில் கவாஸ்கர் தனது 138-வது இன்னிங்ஸிலும் எட்டிஇருந்தனர். ஆனால், இவர்களை எல்லாம் முறியடித்து 128 இன்னிங்ஸில் தனது 25-வது சாதனையை எட்டினார்.
தற்போது இந்திய அணி 85 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 112 ரன்களிலும், ஹனுமா விஹாரி 20 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.