விளையாட்டு

2-வது இன்னிங்ஸ் ஆரம்பம்: கிங்ஸ்லெவன் அணியின் பயிற்சியாளராகிறார் கவுதம் கம்பீர்?

செய்திப்பிரிவு

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கவுதம் கம்பீர், தனது 2-வது இன்னிங்ஸை ஐபிஎல் போட்டியில், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக தொடங்க உள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய அணியில் கடந்த 16 ஆண்டுகளாக இடம் பெற்று விளையாடிய கவுதம் கம்பீர், கடந்த வாரம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 4,154 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 9 சதங்கள், 22 அரை சதங்கள் அடங்கும்.

147 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 5,238 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 11 சதங்களும், 34 அரை சதங்களும் அடங்கும். மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரராகக் கம்பீர் வலம் வந்து, எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். 37 டி20 போட்டிகளில் விளையாடி 932 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 7 அரை சதங்கள் அடங்கும். அதன்பின், கடைசியாக ரஞ்சிப்போட்டியில் மட்டும் விளையாடியதோடு விடைபெற்றார்.

தனது ஓய்வுக்குப்பின் பேசிய கம்பீர் பயிற்சியாளராக விரும்புகிறேன், போட்டியில் வர்ணணையாளராக விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டும் இன்னும் கோப்பை வெல்ல முடியாத கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராகச் செல்ல கம்பீர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட கவுதம் கம்பீர், 3 முறை அந்த அணிக்கு கோப்பையைப் பெற்றுக்கொடுத்தார். அதன்பின் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்குத் திரும்பிய கம்பீர், 3 ஆண்டுகள் இருந்தார். ஆனால், கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மிகவும் மோசமாக விளையாடியதைத் தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கி, ஸ்ரேயாஸ் அய்யரை நியமித்தார்.

அதன்பின் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் ஐபிஎல் ஏலத்தில் இருந்து கம்பீரை நீக்கியது. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

கம்பீர் ஓய்வுக்குப்பின் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்த கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணி, விரைவில் அடுத்த இன்னிங்ஸ் தொடங்கட்டும், எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருந்தது.

அதற்கு பதில் ட்வீட் செய்த கம்பீர், என்னை வாழ்த்திய கிங்ஸ்லெவன் அணிக்கு நன்றி, விரைவில் சந்திப்போம் என்று தெரிவித்திருந்தார். அதற்குப் பதில் ட்வீட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி , உங்களை நாங்களும், எங்களின் சிங்கங்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன என்று தெரிவித்தது.

தற்போது கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக மைக் ஹெசன் செயல்பட்டு வருகிறார். இவர் தலைமையில் கிங்ஸ்லெவன் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. ஆதலால், இவருக்குப் பதிலாக கம்பீர் நியமிக்கப்படுகிறாரா அல்லது, பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார் என்பது விரைவில் தெரியும்.

          
SCROLL FOR NEXT