விளையாட்டு

‘என்னைப் பற்றிச் சொல்ல, நான் ஒவ்வொருவருக்கும் பேனர் பிடிக்க முடியாது’: பொரிந்து தள்ளிய கோலி

பிடிஐ

என்னைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதற்கு நான் எப்போதும் பேனர் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டியது அவசியமில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆவேசமாகத் தெரிவித்தார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணியும், பெர்த்தில் நடந்த 2-வுத டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வென்றன.

இதில் பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போது, விராட் கோலிக்கும், ஆஸி. கேப்டன் டிம் பெய்னுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. விராட் கோலியின் மூர்க்கத்தனமான பேச்சு,செயல்பாடுகளை ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன. ஆஸ்திரேலிய, இந்திய முன்னாள் வீரர்களும் விராட் கோலி கோபத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் அறிவுறுத்தினார்.

இருந்தாலும், இரு கேப்டன்களுக்கு இடையிலான உரசல்கள்,சூடான பேச்சுகள் கடைசிவரை எல்லையைத் தாண்டாமல் இருந்ததால், போட்டி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது.

இந்நிலையில் 3-வது மற்றும் பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெல்ல வேண்டிய தீர்மானத்தோடு அணியில் பல்வேறு மாற்றங்களை இந்திய அணி செய்துள்ளது. இது குறித்தும், ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சனம் குறித்தும் இந்திய அணியின் கேப்டன் கோலியிடம் நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பினார்கள். அப்போது அவர் கூறியதாவது:

என்னை மக்கள் விரும்ப வேண்டும் என்பதற்காக, நான் என்ன செய்கிறேன், நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பற்றிக்கூறுவதற்கு நான் எப்போதும் வெளியே சென்றாலும் கையில் பேனர் வைத்துக்கொண்டு நான் யார் என்று இந்த உலகிற்குத் தெரிவிப்பது இல்லை. இதைத்தான் நான் வெளியே செல்லும் போது செய்கிறேன்.

எனக்கு எதன்மீதும் கட்டுப்பாடு இல்லை. எதன்மீது கவனம் செலுத்துகிறீர்கள் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். என்னுடையநோக்கம் டெஸ்ட் போட்டி, போட்டியை வெல்வதும், அணிக்காகச் சிறப்பாக விளையாடுவதும் என்னுடைய நோக்கம்.

என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன எழுதுகிறார்கள், கருத்து வைத்திருக்கிறார்கள் எனத் தெரியாது. ஆனால், அவர்களின் கருத்தை மதிக்கிறேன். என் மீது அக்கறையுடன் கூட அந்த கருத்து வைக்கப்பட்டு இருக்கலாம். என்னுடைய நோக்கம் அனைத்துமே நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும், வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்பது மட்டுமே.

என்னை இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் வில்லனாகச் சித்தரித்தாலும் எனக்குக் கவலையில்லை. என்னுடைய பயிற்சியாளர் என்னுடன் அதிகநேரம் செலவிடுவதால், என்னைப் பற்றி அவருக்குத் தெரியும். என்னைப் பற்றித் தெரிந்தவர்களிடம் என்னைப்ப ற்றி கேளுங்கள். ஆதலால், ஆஸ்திரேலிய ஊடகங்கள் எழுப்பிய விமர்சனத்துக்குப் பதில் அளிக்க முடியாது.

எனக்கும் பெய்னுக்கும் களத்தில் வாக்குவாதம் நடந்தது. அது நடந்த முடிந்துவிட்ட கதை. சர்வதேச அளவில்உயர்ந்த அளவிலான போட்டியில் இரு அணிகள் பங்கேற்று வருகின்றன. அப்போது, இதுபோன்ற சம்பவங்கள் களத்தில் நடக்கலாம். ஆனால், அதைக் கடந்துவிட்டு அடுத்த போட்டிக்குச் சென்றுவிட வேண்டும்.

நாங்கள் இருவரும் வரம்புமீறி பேசவில்லை, இருக்கும் இடையே எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. என்ன நடந்தது என்று எனக்கும், பெய்னுக்கும் தெரியும். எதையும் அவசியமில்லாமல் இருவரும் செய்யவில்லை.மக்கள் பார்க்கும் வகையில் நல்லவகையான கிரிக்கெட் போட்டியை விளையாட இருவரும் விரும்புகிறோம்.

எந்த விஷயத்தையும் அடைவதற்கு நேர்மறையான சிந்தனையுடன் கூடியமனது மிகவும் அவசியம். என்னைப் பொருத்தவரை மிகவும் வசதியான முறையில்தான் விளையாடுகிறேன்.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT