ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் டி20 போட்டியில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார், விரைவில் புதிய மைல்கல்லையும் எட்ட உள்ளார்.
ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் , தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக்பாஷ் லீக் டி20 போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.
பிரிஸ்பேன் நகரில் நேற்று நடந்த முதலாவது டி20 ஆட்டத்தில், பிரிஸ்பேன் ஹீட் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி. இந்த போட்டியில் ரஷித் கான் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் 2018-ம் ஆண்டில் டி20 போட்டியில் மட்டும் 92 விக்கெட்டுகள் வீழ்த்திய உலகின் முதல் கிரிக்கெட் வீரர் எனும் சாதனையை ரஷித் கான் படைத்தார். இதுவரை 58 போட்டிகளில் விளையாடி இந்த 92 விக்கெட்டுகளை ரஷித் கான் வீழ்த்தியுள்ளார்.
பிக்பாஷ் தொடர் முழுவதும் விளையாட உள்ள ரஷித் கான் அடுத்த சில போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார். அவ்வாறு 100 விக்கெட்டுகளை எட்டிவிட்டால், ஒரு காலண்டர் ஆண்டில் டி20 போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய சர்வதேச அளவில் முதல் கிரிக்கெட் வீரர் எனும் பெருமையை, உலக சாதனையை ரஷித் கான் படைப்பார்.
இதற்கு முன் ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 2016-ம் ஆண்டு டிவைன் பிராவோ 72 டி20 போட்டிகளில் பங்கேற்று 87 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அவரின் சாதனையை இந்த ஆண்டு ரஷித் கான் முறியடித்துவிட்டார்.
பிராவோ 72 போட்டிகளில் பங்கேற்று 87 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், ராஷித் கான் 58 போட்டிகளில் பங்கேற்று 92 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட்டுக்கு கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகமான ரஷித் கான் அதிவிரைவாக ஒருநாள் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமைக்கும் சொந்தக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் சாதனையை ரஷித்கான் படைத்து உலக சாதனை படைத்துள்ளார்.
ரஷித்கான் இதுவரை 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 118 விக்கெட்டுகளையும், 35 டி20 போட்டிகளில் விளையாடி 64 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.