விளையாட்டு

தொடர்ந்து செயலற்ற கேப்டனாக இருக்கிறார் தோனி: இயன் சாப்பல்

செய்திப்பிரிவு

2011ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் ஆகியவற்றை இழந்த பிறகு தற்போது 3-1 என்று தோல்வி தழுவியதற்கு தோனியின் செயலற்ற கேப்டன்சியும் பெரிதளவு பங்களிப்பு செய்தது என்று இயன் சாப்பல் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:

கிரிக்கெட் எழுத்தாளர் மார்டின் ஜான்சன் என்பவர் இங்கிலாந்தின் தொடர் தோல்விகளை வர்ணிக்கும் போது “இங்கி்லாந்து அணியிடத்தில் 3 விஷயங்கள் தவறு. அவர்களால் பேட் செய்ய முடியாது, பந்து வீச முடியாது, பீல்ட் செய்ய முடியாது” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டதை இப்போது தோனி தலைமையிலான இந்திய அணிக்கும் குறிப்பிடலாம்.

லார்ட்சில் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற தோனி அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தவறுகளைச் செய்தார். அதுவும் செய்த தவறுகளையே மீணடும் மீண்டும் செய்தார்.

அவரது தலைமை முறை இந்திய அணி பெற்ற மரண அடிக்கு பெரிய அளவில் பங்களிப்பு செய்தது. 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளைக்குப் பிறகு தோனி தடுப்பு உத்திக்குச் சென்றத் முதல் சரிவு தொடங்கியது.

அவரது கேப்டன்சி பிற்போக்கானது, வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போது தூங்கிவிடுவதற்கு ஒப்பானது அவரது தலைமை முறை.

அவரது கேப்டன்சி மட்டுமல்ல அவரது விக்கெட் கீப்பிங் பவுலர்களின் பந்து வீச்சையும் காலி செய்யும் அளவுக்கு மோசமாக உள்ளது. ஆஃப் திசையில் கைக்கு வரும் கேட்ச்கள் தவிர அவர் வேறு கேட்ச்களுக்குச் செல்லக் கூடாது என்று முடிவெடுத்துள்ளார். இவரது குறையை மறைக்க ஸ்லிப் திசையில் அடிக்கடி பீலடர்களை மாற்றியபடி இருந்தார். அவரது செயலின்மை ஸ்லிப் பீல்டர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

இதனால் ஸ்லிப் திசையில் வந்த கேட்ச்களை விடுவதோடு, நிறைய எட்ஜ்கள் கேட்ச் என்றே கூட உணரமுடியாத அளவுக்கு தரையில் விழுந்தன.

இவை ஒரு புறமிருக்க, அவரது குளறுபடியான அணித் தேர்வு மற்றொரு புறம். அணித் தேர்வில் கேப்டனுக்கு அதிகாரம் அளிப்பதில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கையில்லை. இந்த தொடரில் ஸ்டூவர்ட் பின்னியை ஆல்ரவுண்டராகத் தேர்வு செய்தது நகைச்சுவையானது. சரி, அப்படி வாய்ப்பு கொடுத்தால் கூட அவரைப் பயன்படுத்திய விதம் அதைவிடவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. அவரை 8ஆம் நிலையில் களமிறக்கினார். ஆனால் பவுலிங் கொடுக்கவில்லை.

ஜடேஜாவை முன்னணி ஸ்பின்னராகத் தேர்வு செய்தது சீரியசான தவறு. ஆனால் அவரைப் பயன்படுத்திய விதமோ அவரை ஒரு முன்னணி ஸ்பின்னர் என்று கருத இடமில்லாமல் செய்தது.

இதையெல்லாம் கொடுத்த குழப்பங்கள், அதிர்ச்சிகள் போதாதென்று 4வது டெஸ்ட் சரணாகதிக்குப் பிறகு அவர் கூறியது மேலும் அதிர்ச்சிகரமானது. அதாவது, வெற்றி தோல்விகள் முக்கியமல்ல வழிமுறையே முக்கியம் என்றார்.

ஒரு தொடரில் 46 முறை வழிமுறை சரியாக இருக்கும் அணி அதைவிட தவறான வழிமுறைகளைக் கொண்ட அணியை வென்றதாக நான் இதுவரை பார்த்ததில்லை.

தோனியை எந்த அளவுக்கு குறைகூறுகிறோமோ அதே அளவுக்கு பிசிசிஐ-யின் செயல்பாடுகளையும் குறை கூற வேண்டும். அயல்நாட்டுத் தோல்விகளை சகஜமானதாக எடுத்துக் கொண்டு நிதி மேல் அதிகப் பற்று வைத்திருப்பது பயணம் செய்யும் அணியினரை மிகவும் வசதியாக உணரச் செய்கிறது. இதனால் தோல்விகளும் கூட வசதிகரமாக இருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டின் இப்போதைய தலைவலி என்னவெனில் தோனிக்கு மாற்று இல்லாமலிருப்பது, கோலியின் தொடர் பேட்டிங் தோல்விகளால் தோனிக்கு மாற்று இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தோனி இப்படியே கேப்டன்சி செய்து கொண்டு போனால் ஆஸ்திரேலியாவில் இதைவிடப் பெரிய தலைகுனிவைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இவ்வாறு அந்தப் பத்தியில் கூறியுள்ளார் இயன் சாப்பல்.

SCROLL FOR NEXT