டெஸ்ட் வரலாற்றிலேயே 2 இரட்டைச் சதங்கள் அடித்த ஒரே விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையை வங்கதேசத்தின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் நிகழ்த்தியுள்ளார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது, இதில் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 2ம் நாளான இன்று தன் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்து 219 நாட் அவுட் என்று திகழ, வங்கதேசம் முதல் இன்னிங்சில் 522/7 என்று டிக்ளேர் செய்தது.
இன்னிங்சின் 154வது ஓவரில் சிகந்தர் ரஸா பந்தை ஸ்கொயர் லெக் திசையில் அடித்து சிங்கிள் எடுத்ததன் மூலம் 407 பந்துகளில் முஷ்பிகுர் ரஹிம் இரட்டைச் சதம் எடுத்தார். சிறந்த இன்னிங்ஸ் இது என்று வர்ணனையாளர்களால் வர்ணிக்கப்படும் ஒரு இரட்டைச் சதமாகும் இது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த விக்கெட் கீப்பரும் 2 இரட்டைச் சதங்கள் எடுத்ததில்லை, கில்கிறிஸ்ட், தோனி போன்ற அதிரடி விக்கெட் கீப்பர்கள் கூட ஒரு இரட்டைச் சதமே எடுத்துள்ளனர்.
சுமார் 9 மணி நேரங்களுக்கும் மேல் பேட் செய்த முஷ்பிகுர் ரஹிம் 421 பந்துகளில் 18 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 219 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். முன்னதாக மொமினுல் ஹக் 161 ரன்களை எடுத்தார், இருவரும் சேர்ந்து 266 ரன்களை 4வது விக்கெட்டுக்காகச் சேர்த்தது புதிய வங்கதேச சாதனையாகும்.
கடைசியில் மெஹதி ஹசன் மிராஸ் 68 ரன்கள் விளாசினார். ஆனால் இந்த 522 ரன்களில் ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜார்விஸ் 28 ஓவர்கள் 6 மெய்டன் 71 ரன்கள் 5 விக்கெட்டுகள். ஒவ்வொரு ஸ்பெல்லுமே அபார ஸ்பெல்லாக ஜார்விஸுக்கு அமைந்தது.
முஷ்பிகுர் ரஹிம் சாதனை ஒரு தனிச்சிறப்பான உலக சாதனை எனில் 522 ரன்களில் ஜார்விஸ் 100 ரன்கள் கொடுக்காமல் 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்பதும் அதற்கு ஈடான் ஒரு சாதனையே.