விளையாட்டு

‘மூன்று முகம்’, தோனிதான்... : ட்விட்டர் மோதல் களத்தில் குதித்த சிஎஸ்கே

செய்திப்பிரிவு

எந்த அணியில் நல்ல ஆல்ரவுண்டர்கள் உள்ளனர் என்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தும், மும்பை இந்தியன்ஸும் ட்விட்டரில் கலாய்ப்பு மோதலில் ஈடுபட்டது ரசிகர்களுக்கு விருந்தாகியுள்ள நிலையில் ட்விட்டர் கலாய்ப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் இணைந்தது.

இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தன் சகோதரர் குருணால் பாண்டியா மற்றும் மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டர் பொலார்ட் ஆகியோர் இருக்கும் படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு  ‘பெரிய பொலார்டை ஃபிரேமுக்குள் கொண்டு வர என் போனை உயர்த்திப் பிடித்தேன், மீண்டும் சந்திக்கிறேன் என் சகோதரா’ என்று ட்வீட் செய்திருந்தார்.

இந்த ட்வீட்டையும் படத்தையும் வெளியிட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளம்,  ‘இதை விட சிறந்த ஆல்ரவுடர் மூவர் கூட்டணி உண்டா? நாங்கள் காத்திருக்கிறோம்’ என்று ட்வீட் செய்தது.

இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மொகமது நபி, ரஷீத் கான், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் படத்தை வெளியிட்டு மும்பை இந்தியன்ஸைக் கலாய்த்து ‘காத்திருப்பு முடிந்தது’ என்று பதில் அளித்தது.

இதோடு விட்டு விட மனமில்லாத மும்பை இந்தியன்ஸ் தன் ட்விட்டரில் மீண்டும் தாங்கள் வென்ற 3 ஐபில் கோப்பைகளை வெளியிட்டு, இன்னும் காத்திருப்பு போய்கொண்டிருக்கிறது என்று சன் ரைசர்ஸை கிண்டல் செய்துள்ளது.

இதனையடுத்து களத்தில் குதித்த  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ்.தோனியின் ஒரே படத்தில் 3 தோனிக்களைக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து ‘மூன்று முகம்’ தல, விசில் போடு என்று பதிவிட்டுள்ளது. அதாவது 3 பேர் தனித்தனியாகத் தேவையில்லை தோனி 3 ஆல்ரவுண்டருக்குச் சமம் என்று உணர்த்தும் விதமாக மூன்று முகம் என்று தலைப்பிட்டுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில், சுனில் நரைன், ஜாக் காலீஸ், ஆந்த்ரே ரஸல் படங்களை வெளியிட்டு  ‘did someone say allrounders? 3945 IPL runs and 221 IPL wickets in collage' என்று களத்தில் குதித்துள்ளது.

SCROLL FOR NEXT