விளையாட்டு

தோனியால் பழைய மாதிரி ஆட முடியாது.. அவரிடம் அதை எதிர்ப்பார்ப்பது தவறு: கபில் தேவ் கருத்து

செய்திப்பிரிவு

பேட்டிங்கில் சொதப்பி வரும் தோனி தற்போது டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார், அவரிடமிருந்து பழைய ஆட்டத்தை நாம் எதிர்பார்ப்பது தவறு என்று கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் பேசிய கபில்தேவ், “தோனி ஒரு அனுபவ வீரர், அதன் மூலம் அணிக்கு அவர் உதவ முடியும் எனில் அதுவே போதும். ஆனால் ஒருவிஷயத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும், அவருக்கு வயது 20 அல்ல இனிமேலும் அவர் 20-ஐ அடைய முடியாது.  அவரிடமிருந்து அந்தப் பழைய ஆட்டத்தை எதிர்பார்ப்பது தவறு.

ஆனால் அதுதவிர அவர் அணிக்காக செய்யக் கூடியது முக்கியமானது. அவரால் நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்த முடிந்தால் அவர் அணியின் சொத்து. அவரது உடல் தகுதிதான் முக்கியமானது.

அவர் இன்னும் கூடுதல் போட்டிகளில் ஆட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இதுவரை அவர் என்ன செய்தாரோ அது மிகப்பெரிய விஷயம். நாம்தான் அவரிடமிருந்து பழைய ஆட்டத்தை எதிர்பார்த்து தவறு செய்கிறோம். அது வேலைக்கு ஆகாது.” என்றார்.

அதேபோல், ரவிசாஸ்திரி, விராட் கோலிக்கு ஆமாம்சாமி போடுபவரா, இந்தப் பயிற்சியாளர் பதவிக்கு அவர் தகுதியானவர்தானா என்ற கேள்விக்குக் கபில் தேவ், “அணியும் கேப்டனும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா  அது போதும், நாம் ஒருவரை கேள்விக்குட்படுத்த வேண்டும்? அணி மகிழ்ச்சியாக இருக்கிறதா, அவர் தன் பணியைச் செய்கிறாரா? அது போதும் நமக்கு. அவர்களுக்கு குட்லக்” என்றார் கபில்தேவ்.

SCROLL FOR NEXT