இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்துடன் டி20 அணியிலிருந்து தோனி நீக்கப்பட்டதற்கு பெரிய அளவில் தோனி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இந்நிலையில் விராட் கோலி கருத்து தெரிவித்ததையடுத்து லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் கருத்து தெரிவித்துள்ளார்.
விராட் கோலி, அணித்தேர்வுகுழுவினர் காரணம் கூறிய பிறகே தான் எதற்கு விளக்க வேண்டும் என்றும், இது குறித்து தோனி நீக்கத்தில் தன் பங்கு இருப்பதாக சந்தேகம் இருந்தால் தனக்கு அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரிடம் இதே கேள்வியை எழுப்பிய போது, “அணித்தேர்வுக்குழுவினரின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் இது பற்றி நான் என் கருத்தைக் கூறி அது பிறர் மேல் செல்வாக்கு செலுத்துவதையும் நான் விரும்பவில்லை. ஓய்வறையில் கேப்டன், தேர்வுக்குழுவிடையே என்ன நடந்ததோ அது அங்கேயே முடிந்து போகட்டும் என்று கருதுகிறேன்.
அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் அணியின் நாட்டின் நன்மைக்காக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் சரி” என்றார்.
இந்த முறை ஆஸ்திரேலியா தொடர் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு சச்சின், “கடந்த கால ஆஸி. அணியை இப்போது இருக்கும் ஆஸி. அணியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஆம் நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது” என்றார் சச்சின்.