ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாபின் ஆலோசகர் பொறுப்பை விட்டுச் செல்கிறார் விரேந்திர சேவாக், ஆனால் இது அவர்கள் முடிவு என்று கூறுகிறார் சேவாக்.
இது குறித்து தன் ட்விட்டரில் சேவாக், “அனைத்து நல்ல விஷயங்களும் முடிவுக்கு வரவேண்டியதுதான். கிங்ஸ் லெவன் அணியுடன் நல்ல காலங்களை செலவழித்தேன். 2 சீசன்கள் வீரராக ஆடினேன், 3 சீசன்கள் ஆலோசகராக இருந்தேன். கிங்ஸ் லெவன் அணியுடனான எனது கூட்டுறவு முடிவுக்கு வருகிறது. அனைவருக்கும் நன்றி அணிக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்தைச் சேர்ந்த கிங்ஸ் லெவன் பயிற்சியாளர் மைக் ஹெஸன் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கட்டும் என்று கிங்ஸ் லெவன் நிர்வாகம் உணர்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு பேர் இருந்தால் குழப்பம் ஏற்படுகிறது என்று நியூஸி. பயிற்சியாளரான ஹெஸ்சனே முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கட்டும் என்று நிர்வாகம் முடிவெடுத்ததாகத் தெரிகிறது.
சேவாகின் காலக்கட்டத்தில் கிங்ஸ் லெவன் 17 போட்டிகளில் வென்று 23-ல் தோல்வி தழுவியது. 2017-ல் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்க வேண்டிய தருனத்தில் புனே அணியிடம் தோல்வி கண்டது.
இந்நிலையில் சேவாக் கூறும்போது, “அணி உரிமையாளரிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது, அதில் பிராண்ட் அம்பாசிடர் மற்றும் ஆலோசகர் தேவையில்லை என்று கூறப்பட்டிருந்தது. இது அவர்கள் முடிவு, முடிவெடுப்பதில் எனக்கு எந்த ஒரு பங்கும் இல்லை. இதற்கும் பிரீத்தி ஜிந்தாவுக்கும் சம்பந்தமில்லை என்றே கருதுகிறேன். புதிய ஆலோசகர், புதிய பிராண்ட் அம்பாசடர் வேண்டுமென்று அவர்கள் முடிவெடுத்தால் நான் குறுக்கே நிற்க விரும்பவில்லை” என்று மும்பை மிரருக்கு சேவாக் தெரிவித்துள்ளார்.