11 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தாயக அணியான டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு ஐபிஎல் 2019-ல் ஷிகர் தவண் ஆடுவார் என்று தகவல் வெளியாகியிருந்தது, ஆனால் அவர் எதற்காக 3 டெல்லி வீரர்களுக்கு மாற்றாக பரிமாறிக் கொள்ளப்பட்டார் என்ற ‘உண்மையான’ காரணம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
தவணைக் கொடுத்து விட்டு டெல்லியிலிருந்து 3 வீரர்களான விஜய் சங்கர், ஷாபாஸ் நதீம், அபிஷேக் சர்மா ஆகியோரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.
இதனை அதிகாரபூர்வமாக தன் ட்விட்டரில் அறிவித்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அதில் கூறியிருப்பதாவது:
கனத்த இதயத்துடன் இதனை அறிவிக்கிறோம் எங்கள் அணிக்காக நீண்ட காலம் ஆடிய ஷிகர் தவண் 2019-ல் வேறொரு அணிக்குச் செல்கிறார். ஏலத்தில் ஷிகர் தவணை ரைட் டு மேட்ச் கார்டைப் பயன்படுத்தி சன் ரைசர்ஸ் எடுத்ததில் மகிழ்ச்சியடைந்தது. ஆனால் அவரை ஏலம் எடுத்தத் தொகை மீது அவருக்கு அதிருப்தி நிலவி வந்தது. இதனை நாங்கள் ஐபிஎல் விதிமுறைகளினால் மாற்றியமைக்க முடியவில்லை.
ஆகவே அவரை மற்றொரு அணிக்கு பரிமாற்றிக் கொள்வது இருதரப்பினருக்கும் உகந்ததாக இருக்கும் என்று அணி நிர்வாகம் கருதியது. இத்தனையாண்டுகளாக ஷிகர் தவண் செய்த பங்களிப்புகளை சன்ரைசர்ஸ் மதிப்புடன் அணுகுகிறது. ஆனால் நிதிப்பிரச்சினை காரணமாக அவர் வேறு அணிக்கு போவது சரியென நினைத்தது குறித்து வருத்தமடைகிறோம், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஷிகர் தவணை ரூ.5.2 கோடிக்கு சன் ரைசர்ஸ் ரைட் டு மேட்ச் கார்டு மூலம் ஏலத்தில் தக்கவைத்தது. ஆனால் இந்த விலையில் ஷிகர் தவணுக்கு திருப்தியில்லை என்று அரசல்புரசலாக தகவல்கள் வெளியாகியிருந்தன, இப்போது சன் ரைசர்ஸ் விளக்கம் அளித்துள்ளது.