விளையாட்டு

சஞ்சுவுக்காக மோகன் லால் பகிர்ந்த வாழ்த்துச் செய்தி எழுப்பும் கேள்விகள்!

நட்சத்திரேயன்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் என்ற 19 வயது விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மென் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் மோகன் லால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக உயரும் அளவுக்கு வளர்ச்சி பெற தெரிவித்திருந்த அந்த வாழ்த்துப் பதிவு, 3 மணி நேரத்தில், 31,000 லைக்குகளையும், 600 கருத்துகளையும், 1000 பகிர்வுகளையும் கடந்தது.

கேரளத் திரை உலகின் சூப்பர் ஸ்டார் மோகன் லால். அவர் தனது மாநில வீரர் ஒருவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதை பெருமிதத்தோடு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். சஞ்சு அடுத்த இந்திய கேப்டனாக வேண்டும் என்று வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஆனால், நம் தமிழ்நாட்டு திரை உலக சூப்பர் ஸ்டார்கள், தமிழக விளையாட்டு வீரர்கள் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டபோது இத்தகைய உணர்வினை வெளிப்படுத்தினார்களா?

எவ்வளவோ தமிழக வீரர்கள், இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ளனர். ஆனால் ஒரு சமயம் கூட திரையுலகில் கோலோச்சும் ஸ்டார்கள் எவரும் தமிழக வீரர்களுக்கு தனிப்பட்ட வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.

இளையோர் உலகக் கோப்பை போட்டிகளில் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற பாபா அபராஜித் போன்றோருக்கு இங்கு எந்தவித வாழ்த்துக்களும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக, சாம்பியன் அணியின் கேப்டனான உன்முக்த் சந்த் என்ற வீரரை வட இந்தியாவே பாராட்டியது.

மிகச் சமீபமாக அஸ்வின் அணியில் தேர்வாகி சில பந்துவீச்சுச் சாதனைகளை நிகழ்த்திய பிறகும் திரை உலக ஸ்டார்கள் எவரும் அஸ்வினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததாகத் தெரியவில்லை.

ஆனால், கேரளாவில் தங்கள் மாநில இளம் வீரர் ஒருவர் இந்தியாவுக்கு தேர்வாகி விட்டாலே அடுத்த கேப்டன் அவர்தான் என்ற அளவுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

மோகன்லால் போன்ற ஸ்டார்களிடமிருந்து வாழ்த்துகளைப் பெறுவது என்பது சஞ்சு சாம்சன் என்ற அந்த 19 வயது இளைஞருக்கு எவ்வளவு ஊக்கத்தை ஏற்படுத்தும் என்பது நமக்கு புரிகிறது.

SCROLL FOR NEXT