சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் என்.சீனிவாசன் பங்கேற்க முடியாது என்று பிசிசிஐ-க்கான ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க பிரதிநிதி மெஹ்மூத் ஆப்தி கூறியுள்ளார்.
ஐபில் சூதாட்டம், ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பான வழக்கில் பிசிசிஐ தலைவர் என்.சீனிவாசனுக்கு பதிலாக சுனில் காவஸ்கரை இடைக்கால தலைவராக உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஐசிசி கூட்டங்களில் பிசிசிஐ சார்பில் என்.சீனிவாசன் பங்கேற்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு வழக்கறிஞராகவும் உள்ள ஆப்தி ஓர் அறிக்கையை வெளியிடுள்ளார்.
அதில் பிசிசிஐ சார்பில் ஐசிசி கூட்டத்தில் பங்கேற்கும் தகுதியை சீனிவாசன் இழந்துவிட்டார். எனெனில் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில் தொடர்புடைய அனைவரும் பிசிசிஐ செயல்பாடுகளில் இருந்து விலக வேண்டுமென்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. எனவே பிசிசிஐ சார்பில் ஐசிசி கூட்டங்களில் சீனிவாசன் பங்கேற்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடியின் வழக்கறிஞராகவும் ஆப்தி உள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.