ஐபிஎல் கிரிக்கெட்டில் 11 ஆண்டுகளாக ஆடி வரும் ஷிகர் தவண், 2019 ஐபிஎல் தொடரில் தனது தாயக அணியான டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்குத் திரும்புகிறார்.
விஜய் சங்கர், ஷாபாஸ் நதீம், அபிஷேக் சர்மா ஆகிய 3 வீரர்களை ஷிகர் தவண் மூலம் பரிமாறி கொண்டுள்ளது சன் ரைசர்ஸ் ஹைதராபாத். கடந்த ஏலத்தில் ஷிகர் தவணுக்கு ரூ.5.2 கோடி கொடுத்து ஒப்பந்தித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ஆனால் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் ஷிகர் தவண் அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து ஷிகர் தவணை விடுவிக்க சன் ரைசர்ஸ் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விஜய் சங்கரை ரூ.3.2 கோடிக்கும் நதீமை ரூ.3.2 கோடிக்கும், அபிஷேக் சர்மாவை ரூ.55 லட்சத்துக்கும் டெல்லி அணி ஏலம் எடுத்தது. ஆக மொத்தம் ரூ.6.95 கோடி, இவர்களை சன் ரைசர்ஸ் அணி ஷிகர் தவணைக் கொடுத்து பரிமாறிக் கொண்டுள்ளது, மீதமுள்ள தொகையை ரொக்கமாக டெல்லி அணிக்குக் கொடுக்க வேண்டும் என்பது உடன்படிக்கை.
2008-ல் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ஆடினார் ஷிகர் தவண். பிறகு மும்பை அணிக்கு 2 சீசன் ஆடிவிட்டு பிறகு ஹைதராபாத் வந்தார். டெக்கான் சார்ஜர்ஸுக்கு ஆடி பிறகு சன் ரைசர்ஸ் அணிக்காக 2013 முதல் ஆடி வந்தார்.
சன் ரைசர்ஸ் அணியில் ஷிகர் தவண் முன்னணி ரன் ஸ்கோரர் ஆவார், 91 இன்னிங்ஸ்களில் 2768 ரன்களை 35.03 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 2018 ஐபிஎல் தொடரில் தவண் 497 ரன்களை 35.50 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் விராட் கோலி-கிறிஸ் கெய்ல் கூட்டணி எடுத்த 2787 ரன்கள், கோலி-டிவில்லியர்ஸ் கூட்டணி எடுத்த 2525 ரன்களுக்கு அடுத்து ஷிகர் தவண், டேவிட் வார்னர் கூட்டணி 2357 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.